ஒற்றுமையே பலம் - அமைச்சர் ஆரோன் டாகாங்
- Surendran Sumdraraj
- 16 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 16-
மலேசியாவின் பல இன மக்கள் வாழும் சமூக நல்லிணக்கத்தைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஆரோன் டாகாங் அனைத்து மலேசியர்களையும் கேட்டுக் கொண்டார்.
இன்றைய உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், மதம், இனம் மற்றும் அரச குடும்ப அமைப்புகள் தொடர்பான உணர்ச்சிவசப்படுத்தும் விவகாரங்கள் மக்களிடையே பிளவை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக இனவாத உணர்வுகள் நீண்ட காலமாக உருவாக்கப்பட்ட நல்லுறவுகளைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இன்று தனது சமூக ஊடகமான பேஸ்புக் பதிவில் கருத்து தெரிவித்த அவர், மலேசியா பல இனங்களும் பல மதங்களும் ஒன்றிணைந்து வாழும் நாடாக இருப்பதால் தான் உறுதியாக நிற்கிறது என்று கூறினார்.
“மலேசியா அதன் மக்களின் பல்வகைத் தன்மையால் உறுதியாக நிற்கிறது. நாம் ஒன்றிணைந்திருக்கும் போது தான் இன்னும் வலிமையானவர்களாக இருக்க முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், பரஸ்பர மரியாதையைக் கடைப்பிடிக்கவும், வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளவும், அந்த வேறுபாடுகளையே நாட்டின் தனித்துவமாக கொண்டாடவும் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



