அறிவே வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் சொத்து; தங்கப் பதக்கம் அறிவுத் தேடலின் அடையாளம் – டாக்டர் யாந்தி இடாயா அஸ்புரா
- Surendran Sumdraraj
- 24 Nov, 2026
கோலாலம்பூர், நவ. 24-
மலாயா பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் சமூக அறிவியல் புலத்தின் இந்திய ஆய்வியல் துறை ஏற்பாட்டில் நடைபெற்ற 19-ஆவது தங்கப் பதக்க விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய கலைப் புலத்தின் தலைவர் இணைப் பேராசிரியர் டாக்டர் யாந்தி இடாயா அஸ்புரா, கல்வி மற்றும் அறிவின் மதிப்பு தங்கத்தைப் போன்றே என்றும் நிலைத்திருக்கும் என்றார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்விருது விழா, 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், இதுவரை 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கப் பதக்கங்களைப் பெற்றிருப்பது பெருமைக்குரிய சாதனை என அவர் பாராட்டினார்.
தங்கம் மதிப்புமிக்க உலோகமாகத் திகழ்வதைப் போல, கடின உழைப்பு, விடாமுயற்சி, தியாகம் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அறிவும் வாழ்க்கையின் மிகச் சிறந்த சொத்தாகும் எனக் குறிப்பிட்ட அவர், தனிமனித வளர்ச்சியுடன் சமூகத்தின் மாண்பையும் உயர்த்தும் ஆற்றல் கல்விக்கு உண்டு என்றார்.
மேலும், இவ்விழா தொடர்ந்து நடைபெற ஆதரவளித்து வரும் ஓம்ஸ் குழுமத்தின் தலைவர், ஓம்ஸ் பா.தியாகராஜனுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
அதேவேளை, பட்டம் பெற்ற மாணவர்கள் தாங்கள் கல்வி கற்ற இடத்தை மறந்துவிடாமல், சமூகத்திற்கும் நாட்டுக்கும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

