BUDI95 பயனாளர்களில் 1%க்கும் குறைவானவர்களே மாதம் 200 லிட்டருக்கு மேல் RON95 பயன்படுத்துகின்றனர் – அமீர் ஹம்சா
- Surendran Sumdraraj
- 25 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 25 –
BUDI MADANI RON95 (BUDI95) திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1.4 கோடி பயனாளர்களில், மாதத்திற்கு 200 லிட்டருக்கும் அதிகமாக RON95 பெட்ரோலைப் பயன்படுத்துபவர்கள் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தில் அவர் கூறுகையில், இந்தத் தகவல்கள் தினசரி கண்காணிப்பு மற்றும் பயனாளர்களின் அடையாள அட்டை (MyKad) எண்ணின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தரவுப் பகுப்பாய்வின் மூலம் பெறப்பட்டவை என்பதால், அவை வெளிப்படையான மற்றும் நம்பகமான தரவுகள் என்றார்.
“BUDI95 திட்டத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் தங்களது அடையாள அட்டை எண்ணை அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். தினமும் சுமார் 30 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவாகின்றன. எங்களிடம் உள்ள தரவுத்தளத்தை ஆய்வு செய்து, ஒவ்வொரு பயன்பாட்டையும் பகுப்பாய்வு செய்து உறுதிப்படுத்த முடிகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், 2025 அக்டோபரில் BUDI95 திட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த மாதம் வரை, நாடு முழுவதும் இத்திட்டம் சீராக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
RON95 இலக்கு மானியத் திட்டம் தொடர்பாக கூடுதல் கேள்வி எழுப்பிய பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹாஷிமுக்கு பதிலளித்த அமீர் ஹம்சா, அரசாங்கத்தின் தரவு அடிப்படையிலான அணுகுமுறை மூலம் மானியம் உண்மையில் தகுதியான மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய முடியும் என்று வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



