ஜகார்த்தா நோக்கி சென்ற விமானங்கள் KLIA-விற்கு திருப்பிவிடப்பட்டது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 7: அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, ஜகார்த்தா நோக்கிச் சென்ற இரண்டு விமானங்கள் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு (KLIA) திருப்பி விடப்பட்டதாக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) இன்று தெரிவித்தது.

KLIA-வை ஒரு மாற்று விமான நிலையமாகப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் மலேசியா இந்தோனேசியாவிற்கு உதவி வருவதாக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி நோராஸ்மான் மஹ்மூத் கூறினார்.

ஜகார்த்தா நோக்கிச் சென்ற சில விமானங்கள் KLIA-விற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. இதுவரை, அவ்வாறு திருப்பி விடப்பட்ட இரண்டு விமானங்கள் இங்கு வந்துள்ளன  என்று ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர்கள்-ஜெனரல்களின் 61-வது மாநாட்டின் இடையே அவர் தெரிவித்தார்.

இன்று காலை ஓமானிலிருந்து வந்த ஒரு விமானமும், நேற்று சவுதி அரேபியாவிலிருந்து வந்த மற்றொரு விமானமும் KLIA-விற்குத் திருப்பி விடப்பட்டதாக நோராஸ்மான் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனாக் கிரகடாவ் எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல், ஜாவா மற்றும் சுமத்ரா பகுதிகளின் மீது பரவியதைத் தொடர்ந்து, ஜகார்த்தாவின் முக்கிய நுழைவாயிலான சோகார்னோ-ஹட்டா பன்னாட்டு விமான நிலையம் உட்பட எட்டு விமான நிலையங்களில் இந்தோனேசியா தனது செயல்பாடுகளை நிறுத்தி வைத்தது.

 விமான ரத்து நடவடிக்கைகளால் இதுவரை சுமார் 1,70,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *