எப்ஸ்டீன் இரவு விருந்தில் கலந்து கொண்ட எலான் மஸ்க், மார்க் ஸக்கர்பெர்க்!
- Muthu Kumar
- 10 Feb, 2026
ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணை கோப்புகளில் இருந்து புதிதாக ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.. அதில், டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் மெட்டா (முன்னாள் ஃபேஸ்புக்) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸ்க்கர்பெர்க் ஆகியோர் ஒரு நீண்ட விருந்துணவு மேசையில் ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது..
இந்த புகைப்படம், அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் (US Department of Justice) வெளியிட்டுள்ள பெரும் அளவிலான விசாரணை ஆவணங்களின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது. அந்த புகைப்படத்தில், எலான் மஸ்க் மற்றும் மார்க் சக்கர்பெர்க் ஒரே நீண்ட மேசையில் அருகருகே அமர்ந்திருப்பது தெளிவாக காணப்படுகிறது.
இந்த கோப்புகளில் இடம்பெற்றுள்ள மின்னஞ்சல்களின்படி, 2015 ஆகஸ்ட் 2-ஆம் தேதி, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னிடம் தானே எழுதி வைத்துக் கொண்ட குறிப்பில்,
"musk thiel zuckerberg" என்ற பெயர்களுடன், லாஸ் ஏஞ்சலஸில் இரவு விருந்து சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளதாக பதிவு செய்திருந்தார். இது, எலான் மஸ்க், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மற்றும் முதலீட்டாளர் பீட்டர் தியல் ஆகியோரை குறிக்கும் வகையில் இருப்பதாக தெரிகிறது. அதன் மறுநாளே, அந்த விருந்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படத்தை, எப்ஸ்டீன் தன்னிடமே மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.
இந்த ஆவணங்களில் எலான் மஸ்க் பெயர் இடம்பெற்றிருப்பதன் மூலம், அவர் எந்தவிதமான குற்றச்செயலில் ஈடுபட்டார் என்பதற்கான சான்று எதுவும் இல்லை என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை ஆவணங்களில் பெயர் இடம்பெற்றதன் மூலம், அது குற்ற நடவடிக்கையை குறிக்காது என்பதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
பாலியல் குற்றத்தில் தண்டனை பெற்ற நபரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், அரசியல், வணிகம் மற்றும் கல்வித் துறைகளில் செல்வாக்கு கொண்ட பலருடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும்.. அவர் 2008-ஆம் ஆண்டு ஃப்ளோரிடாவில், சிறுமியிடமிருந்து பாலியல் சேவை கேட்ட குற்றத்தில் தண்டனை பெற்றார். பின்னர், 2019-ஆம் ஆண்டு, கூட்டாட்சி பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளில் விசாரணையை எதிர்நோக்கிக் கொண்டிருந்த போது, சிறையில் மரணம் அடைந்தார்.
எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்கள், தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இவை மில்லியன் கணக்கான பக்கங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உள்ளடக்கியவை.அந்த கோப்புகளில், எப்ஸ்டீன் மற்றும் பல முக்கிய நபர்களுக்கிடையிலான விரிவான மின்னஞ்சல் உரையாடல்கள் இடம்பெற்று உள்ளன. சில மின்னஞ்சல்களில், 2012-ஆம் ஆண்டு, எப்ஸ்டீனின் தனியார் கரீபியன் தீவுக்கு செல்லும் பயணம் குறித்து எலான் மஸ்க் கேள்வி எழுப்பியிருந்ததும் பதிவாகியுள்ளது.
எலான் மஸ்க், தான் அந்த தீவிற்கு ஒருபோதும் செல்லவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.இந்த ஆவணங்கள் முழுமையாக வெளியிடப்பட்டதன் விளைவாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அரசியல் மற்றும் சமூக ரீதியான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
சில பொது வாழ்க்கை நபர்கள், எப்ஸ்டீனுடன் 2008-ஆம் ஆண்டு தண்டனைக்குப் பிறகும் தொடர்பில் இருந்தது தெரிய வந்ததால், விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.. சிலர் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகள், இந்த ஆவணங்கள் அனைத்தும் முழுமையான ஆய்வுக்குப் பிறகே, பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதன் நோக்கம், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



