நான்காம் படை வீடு( சுவாமி மலை)

top-news


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடு சுவாமிமலை (திருவேரகம்) ஆகும். கும்பகோணம் அருகில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இத்தலத்தில், முருகன் தன் தந்தை சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்ததால், தகப்பன் சுவாமி மற்றும் சுவாமிநாதர் என்று அழைக்கப்படுகிறார். 
தஞ்சாவூர் தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு இது.பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற மலைக்கோயிலாகும். தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது இத்தலம். இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும், சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா சிறப்பாக பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.

வரலாறு
பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத காரணத்தினால் பிரம்மாவை சிறையில் அடைத்தான் முருகப்பெருமான். ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமானே, சிஷ்யனாக அமர்ந்து பிரணவத்தின் பொருளை முருகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் என்கின்றன புராணங்கள். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலைஎன்று பெயர் பெற்றுள்ளது.

சோழ நாட்டையே ஒரு சிவத்தலமாகப் பாவித்து வழிபடும் முறை உண்டு. அந்த வகையில் திருவலஞ்சுழியை விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலையை முருகன் சன்னதியாகவும் கொள்வர். இத்தலத்தை முருகனின் சிறப்புமிக்க அழகிய படைவீடு என்ற பொருளில் (ஏர்+அகம்) ஏரகம் என்றனர். ஏர்த் தொழிலான விவசாயத்தில் சிறந்த பகுதியில் உள்ள அகம் என்று  கொள்ளலாம். 

சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது. மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை. 

இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில்  கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது. மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம். *

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *