மலேசிய அரசைக் கவிழ்க்க சதியா? ஹாடியின் கூற்று தொடர்பாக PKR தரப்பில் போலீஸில் மூன்று புகார்கள்
- Shan Siva
- 07 Sep, 2026
கோலாலம்பூர்: 2014-ஆம் ஆண்டில் மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்க அதிகாரிகள் உதவி செய்வதாக முன்மொழிந்ததாக PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, PKR கிளைத் தலைவர்கள் நேற்று மூன்று காவல் புகார்களை அளித்தனர்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற PAS பொதுப் பேரவைக் கூட்டத்தில் ஹாடி ஆற்றிய உரையில் தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இந்தப் புகார்கள் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014-இல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியாவுக்கு வருகை தந்திருந்தபோது, கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பல PAS தலைவர்களிடம் இந்த உதவிக்கான முன்மொழிவு விடுக்கப்பட்டதாக ஹாடி கூறியிருந்தார். அக்கூட்டத்தில் தக்கியுடின் ஹசான் (Takiyuddin Hassan), அகமது சம்சூரி மொக்தார் (Ahmad Samsuri Mokhtar), முஸ்தபா அலி (Mustafa Ali) மற்றும் அமெரிக்கத் தூதர் ஆகியோர் கலந்துகொண்டதகக் கூறினார்.
தாங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், அரசியலமைப்புக்கு முரணான வழிகளில் அரசாங்கத்தையும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும் கவிழ்க்க அல்லது பலவீனப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டையும் சட்டப்படி விசாரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கே இந்தப் புகார்கள் அளிக்கப்பட்டதாகவும் புகாரளித்தவர்களில் ஒருவரான ஜோநாதன் தெரிவித்தார்.
நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இந்தப் புகார்கள் பெறப்பட்டதை செராஸ் (Cheras) காவல் துறைத் தலைவர் ரோஸ்டி டவுட் (Rosdi Daud) உறுதிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



