மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களுக்குத் தடை இல்லை – சென்னை ஐகோர்ட்டு
- Surendran Sumdraraj
- 16 Sep, 2026
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் நடைமுறையை தடுக்க இயலாது என்று நீதிபதிகள் கூறினர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகி அரசுக்கு செலவு ஏற்படுவதாகக் கூறி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கவும், அங்கு தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமாவின் வேட்பு மனுக்களை ஏற்கத் தடை விதிக்கவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய உரிமை உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அதேநேரத்தில் மக்களின் வாக்குரிமையையும் நம்பிக்கையையும் தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தற்போதைய சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து பதிலளிக்க தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டதுடன், விசாரணை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



