இரட்டை பதக்கம் வென்று வாகை சூடிய மகாம்பிகை உமாசங்கர்
- Surendran Sumdraraj
- 10 Apr, 2026
-தி-கிரிஷன்-
சர்வதேச எழுத்துக்கூட்டுதல், மொழியியல் ஒலிம்பியாட் (ISLO) என்பது தொடக்கநிலைப் பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பன்னாட்டுப் போட்டியாகும். மாணவர்களிடையே எழுத்துக்கூட்டும் திறன், வாசிப்புப்புரிதல், சொல்லகராதி, இலக்கணம் உள்ளிட்ட மொழியியல் பயன்பாடுகளில் தனிச்சிறப்பை வளர்ப்பதை இப்போட்டி முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஈர்கக்கூடிய உலகளாவிய போட்டிகளின் வாயிலாக, மாணவர்களை எழுத்துக்கூட்டும் கலையில் நிபுணத்துவம் பெறச் செய்வதுடன்,சர்வதேச அளவில் அவர்களின் மொழியியல் ஆளுமையையும் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும்மேம்படுத்தும் உன்னதக் களமாக ISLO திகழ்கிறது.
தென்கிழக்கு ஆசியாவின் உலகளாவிய ஆங்கில மொழி ஒலிம்பியாட் (GELOSEA) என்பது பாலர் பள்ளி முதல் இடைநிலைப்பள்ளி (தரம் 12) வரையிலான மாணவர்களுக்காக நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழிப் போட்டியாகும்.
உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழிப் பயன்பாட்டின் மேன்மையையும் புலமையையும் ஊக்குவிப்பதில் இப்போட்டி முதன்மைப் பங்கு வகிக்கின்றது.
அவ்வகையில் இம்முறை இவ்விருபோட்டிகளும் சிங்கப்பூரின் ‘டி மார்கி’ (D’Marquee) அரங்கில் கடந்த ஏப்ரல் 5 முதல் 8 வரை நடைபெற்ற நிலையில் கெடா, சுங்கை பட்டாணி பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளியினைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவி மகாம்பிகை உமாசங்கர் பங்கேற்று இரட்டைப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் நடைபெற்ற சர்வதேச எழுத்துக்கூட்டு, மொழியியல் ஒலிம்பியாட் (ISLO) எனும் சர்வதேசப் போட்டியில், பிரிவு 3ன் கீழ் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தையும், தென்கிழக்கு ஆசியாவின் உலகளாவிய ஆங்கில மொழி ஒலிம்பியாட் போட்டியில் 6-ஆம் வகுப்புப் பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்று மலேசியத் திருநாட்டிற்குப் பெருமைச் சேர்த்துள்ளார்.
பன்னாட்டு மாணவர்களிடையே நடைபெற்ற இக்கடுமையான போட்டிகளில், ஆங்கிலப் புலமையும் மொழியியல் நுணுக்கங்களிலும் தமது தனித்திறனை வெளிப்படுத்தி மாணவி மகாம்பிகை இந்த மகத்தான வெற்றியைப் பதிவுச் செய்துள்ளார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களும் உலகளவில் பல்வேறு துறைகளில் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



