36 ஆண்டு காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: செபக் தக்ராவில் மலேசியாவுக்குத் தங்கம்
- Surendran Sumdraraj
- 25 Sep, 2026
நகோயா, செப். 25-
ஐச்சி–நகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் செபக் தக்ராவ் அணிப் பிரிவில் மலேசியா, பாரம்பரிய எதிரியான தாய்லாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.
இதன்மூலம், இப்பிரிவில் தங்கம் வெல்வதற்கான மலேசியாவின் 36 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. மலேசியா கடைசியாக 1990 பெய்ஜிங் ஆசிய விளையாட்டில் தாய்லாந்தைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றிருந்தது.
நகோயா சிட்டி மிசுஹோ அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் முகமது சய்ஹிர் முகமது ரோஸ்டி, பர்ஹான் அடாம் மற்றும் முகமது அஸ்லான் அலியாஸ் ஆகியோர் அடங்கிய மலேசியாவின் முன்னணி அணி, தாய்லாந்தின் மருகின் பான்மகோன், புதாவான் சோபா மற்றும் போர்ன்தெப் திங்பாங்போன் அணியை 15-9, 5-15, 15-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் புள்ளியை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து களமிறங்கிய முகமது சுல்கிப்லி அப்துல் ரசாக், ஐடில் ஐமான் அஸ்வாவி மற்றும் முகமது அஃபிபுடின் ரசாலி ஆகியோர், தாய்லாந்தின் கிரிட்சனாபோங் நோன்டகோட், தனாபோன் சாப்யென் மற்றும் வுட்டினு கம்சானோர் அணியை 15-13, 15-10 என்ற நேர் செட்களில் தோற்கடித்தனர்.
இதன் மூலம் மலேசியா 2-0 என வெற்றி பெற்று ஆசிய விளையாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



