கோலாலம்பூர், மார்ச் 30-
மலேசியாவிலிருந்து காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு அனுப்பப்படவுள்ள 374 டன் மனிதாபிமான உதவிகளை எளிதாக வழங்க எகிப்து தெளிவான உறுதியும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் எகிப்து ஜனாதிபதி அப்தெல் பத்தாஹ் எல்-சிசியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்த உதவிப் பொருட்களை ரபா எல்லை வாயிலாக ஏப்ரல் மாதம் முதல் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“எல்-சிசி தெளிவான உறுதியை வழங்கியுள்ளார். இதன் மூலம் உடனடி உதவிகள் 100,000க்கும் மேற்பட்ட காசா மக்களுக்கு சென்றடைய வழி ஏற்படும்,” என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
மேலும், மனிதாபிமான உதவிகளைத் தடுக்க முயலும் சியோனிச் இஸ்ரேல் ஆட்சியின் தடைகளை மலேசியா ஒருபோதும் ஏற்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த உதவி நடவடிக்கை, கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்களுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.