900ஆவது கோலை நோக்கி மெஸ்சி
- Surendran Sumdraraj
- 08 Mar, 2026
வாஷிங்டன், மார்ச் 8-
உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமான லயனல் மெஸ்சி தனது வாழ்க்கை சாதனையில் இன்னொரு முக்கிய மைல்கல்லை எட்டும் நிலையில் உள்ளார். அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் (MLS) போட்டியில் இன்டர் மயாமி அணி டி.சி. யுனைடெட் அணியை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போட்டியில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
பால்டிமோரில் உள்ள எம் அண்ட டி வங்கி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 27ஆவது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் அவர் தனது கணக்கை மேலும் உயர்த்தினார். கடந்த வாரம் ஆர்லாண்டோ சிட்டி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் மெஸ்சி இரண்டு கோல்கள் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்திருந்தார்.
இந்த கோல், இன்டர் மயாமி அணிக்காக மெஸ்சி அடித்த 80ஆவது கோலாகும். இதனால் அவரது மொத்த கோல்கள் தற்போது 899 ஆக உயர்ந்துள்ளன. மேலும் ஒரு கோல் அடித்தால், 900 கோல்கள் என்ற அபூர்வ சாதனையை அவர் எட்டவுள்ளார்.
எட்டு முறை பாலன் டி’ஓர் விருதை வென்றுள்ள மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 672 கோல்களையும், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மேன் அணிக்காக 32 கோல்களையும் அடித்துள்ளார். அதோடு, அர்ஜென்டினா தேசிய அணிக்காகவும் 115 கோல்கள் பதிவு செய்துள்ளார்.
ஜூன் மாதத்தில் தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ள மெஸ்சி, இன்னும் உலக கால்பந்து அரங்கில் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



