பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் எதிரொலி: சபா கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 08 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 8 –
பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ கடலோரப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சபா மாநிலத்தின் பல கடலோரப் பகுதிகளுக்கு மலேசிய வானிலை ஆய்வு துறை (MetMalaysia) சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
MetMalaysia வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று காலை 7.37 மணியளவில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் வட அட்சரேகை 5.7 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 125.1 டிகிரி பகுதியில், சபாவின் செம்போர்னாவிற்கு கிழக்கே சுமார் 747 கிலோமீட்டர் தொலைவில், 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாவாவ், செம்போர்னா, குனாக் மற்றும் லஹாட் டத்து ஆகிய கடலோரப் பகுதிகளில் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சுனாமி அலைகள் கரையை அடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடற்கரைகள் மற்றும் தாழ்வான பகுதிகளிலிருந்து உடனடியாக பாதுகாப்பான உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளையில், தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NADMA), கடல்சார் அமலாக்க நிறுவனம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



