பசி கொடுமையின் உச்சம்; இலை தழைகளை தின்று உயிர் வாழும் சூடான் மக்கள்
- Surendran Sumdraraj
- 14 Apr, 2026
உள்நாட்டு போர் காரணமாக கடுமையான மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்து வரும் சூடானில், மக்கள் பசியால் இலை தழைகள் மற்றும் கால்நடை தீவனங்களை உணவாக எடுத்துக்கொண்டு உயிர் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் உணவுப் பற்றாக்குறை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக சர்வதேச நிவாரண அமைப்புகள் எச்சரித்துள்ளன.
சூடானில் நீடித்து வரும் போர் காரணமாக விவசாய நிலங்கள் சேதமடைதல், சந்தைகள் மூடப்படுதல் மற்றும் உணவுப் பொருள் விநியோகம் பாதிப்பு போன்ற காரணங்களால் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக வட தார்ஃபூர் மற்றும் தெற்கு கோர்டோஃபான் பகுதிகளில் பல குடும்பங்கள் ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவுடன் மட்டுமே வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் பல நாட்கள் முழுமையாக உணவின்றி தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
பசி தாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சிலர் மர இலைகள், புல், கால்நடைகளுக்கான தீவனங்கள் போன்றவற்றை சாப்பிட்டு உயிர் காக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. போர் மற்றும் முற்றுகை நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் உணவு அமைப்பு முற்றிலும் சிதைந்துவிட்டதாகவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
தற்போது சூடான் உலகின் மிகப்பெரிய பசி நெருக்கடியை சந்திக்கும் நாடாக மாறியுள்ளதாகவும், அங்கு நிலவும் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் ஐ.நா. மற்றும் உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்த செய்தி உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



