நவகிரகங்களை வழிபடும்போது நாம் செய்யும் தவறுகள்!
- Muthu Kumar
- 08 Mar, 2026
கோவிலில் நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது வாழ்க்கையின் தடைகளை நீக்கி நற்பலன்களைத் தரக்கூடிய ஒன்பது கோள்கள் ஆகும்.நவகிரகத்தின் அருளும், ஆசியும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக அவசியம். நவகிரகங்கள் தான் நாம் நம்முடைய வாழ்க்கையை முறையாக வாழ்வதற்கு வழிவகுத்து தருகிறார்கள்.
நவகிரகங்களுக்கு உரிய தினங்களில், தகுந்த வஸ்திரம், மலர் மற்றும் நவதானியங்களை வைத்து, முறைப்படி 7 அல்லது 9 முறை வலம் வந்து வழிபட, கிரக தோஷங்கள் நீங்கி, நல்வாழ்வு மற்றும் யோகம் கிடைக்கும்.பல பக்தர்கள், கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்யும் போது தாங்கள் உண்மையில் ஆசீர்வாதங்களைத் பெறுவதற்கு நேர்மாறானதைச் செய்கிறார்கள் என்பதை உணராமல் சில நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். கோவில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான்.
அந்த வகையில் கோவிலுக்கு சென்று நவகிரகத்தை வணங்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்க.
கோவிலுக்கு சென்றால் எப்போதும் விநாயகரை முதலில் வணங்கி, பிறகு அந்த ஆலயத்தின் மூலவரை வணங்கி, இறுதியாகவே நவகிரக சன்னதியை வழிபட வேண்டும். நவகிரகங்களுக்கு பீரித்தி செய்யவோ அல்லது பரிகாரம் செய்வதற்காக எள்தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்ற போனாலும் முதலில் நவகிரகத்திற்கு போய் நேரடியாக பரிகாரம் செய்யக்கூடாது. முதலில் விநாயகர், அடுத்து மூலவரை வணங்கிய பின்னர்தான் நவகிரக சன்னதியில் வழிபாடு செய்யவேண்டும்.
சனி பகவானை கும்பிடும்போது அவருக்கு நேர் எதிரில் நிற்காமல் சற்று ஓரமாக நின்று வணங்கவேண்டும்.போனில் பேசிக்கொண்டோ அல்லது அடுத்தவரிடம் பேசிக்கொண்டே நவகிரகங்களை வலம் வரக்கூடாது. அமைதியாக, மனதில் இறைவனை நினைத்துக்கொண்டு தான் வலம் வரவேண்டும்.
நவகிரக சிலைகளை கைகளாலோ, ஆடைகளாலோ தொடவே கூடாது. தள்ளி நின்று தான் வணங்க வேண்டும். குறிப்பாக பெண்கள் குறிப்பிட்ட வயது வரை எந்த தெய்வ விக்ரகத்தையும் தொட்டு வணங்கக்கூடாது என்பது ஐதீகம்.நவகிரகங்களை இடது பக்கமாக சுற்றக்கூடாது. ஒன்பது முறை வலது பக்கமாக மட்டுமே சுற்ற வேண்டும். சிலர் வலது பக்கமாக 7 சுற்று சுற்றி விட்டு ராகு, கேதுவிற்காக 2 சுற்றை இடது புறமாக சுற்றுவார்கள். இது முற்றிலும் தவறானது. அதேபோல் நவகிரகத்தை சுற்றி விட்டு திரும்பி பார்க்காமல் வரவேண்டும்.
சனிக்கிழமைகளில் மட்டும் நவகிரகங்களை 9 முறை சுற்றினால் போதுமானது. தினமும் கோவிலுக்கு செல்பவர்கள் 1 முறை மட்டும் சுற்றினால் போதுமானது, 9 முறை சுற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நவகிரகங்களைச் சுற்றி வரும்போது கைகளைக் கட்டிக்கொண்டோ, தட்டிக்கொண்டோ செல்லக்கூடாது. கைகளை விரித்து வைத்து, அமைதியாக வலம் வர வேண்டும்.
நவகிரகங்களுக்கு விளக்கு போடும் போது மற்றவர்களின் விளக்கை எடுத்து பயன்படுத்தக்கூடாது. புதிய விளக்கு மட்டுமே வாங்கி பயன்படுத்துவது நல்லது. சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சனி தோஷத்தைக் குறைக்கும். நவகிரகங்களை சுற்றி விட்டு கோவில் பிரகாரத்தில் சற்று நேரம் அமர்ந்து விட்டுதான் வீட்டிற்கு கிளம்ப வேண்டும்.இந்த எளிய மாற்றங்கள் தோஷங்களை நீக்கி, உங்கள் வாழ்க்கையில் சக்திவாய்ந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



