‘சித்தி’ என்கிற அம்மா! ஓர் அன்பின் விருட்சம் அன்னையான கதை!

top-news
FREE WEBSITE AD

(சண்.சிவா)

பத்து மாதம் சுமக்கவில்லை.... பால் கொடுக்கும் வாய்ப்பும் இல்லை... ஆனாலும், அன்பின் கருணையால் அன்னையாகி, அரவணைப்பில் தெய்வத்தின் சாயலாகி, முத்து முத்தாய் ஏழு பிள்ளைகளை உருவாக்கி, அவர்கள் அத்தனை பேரையும் உலகம் போற்றும் சாதனையாளர்களாய் உயர்த்திக் காட்டி வியக்க வைத்திருக்கிறார் ஒரு தியாகத் தாய்.

90 வயதாகும் அந்த அன்னையின் பாசத்தில் திளைத்து வளர்ந்த அந்த எழுவரும்.... அம்மா அம்மா என்றே உருகுகிறார்கள். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்ற வாசகம் எங்கள் அன்னைக்கான வாசகம்தான், எங்கள் அம்மா போல் எவரும் இல்லை.... அவர் இல்லையேல் இன்று நாங்களே இல்லை என வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என்றே அர்ச்சித்து நம்மை வியக்க வைக்கிறார்கள் அந்த  ஏழு பிள்ளைகளும்

அவர்கள் எழுவரும் சாதாரணமானவர்கள் அல்லர்.... ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லுநர் என்பதுதான் சிறப்பு. அதிலும் உலகின் தலைசிறந்த பத்து சாதனையாளர்களில் இந்த எழுவரில் ஒருவரும் உண்டு என்பது இன்னும் கூடுதல் சிறப்பு.

இப்படி அம்மாவின் பேரன்பில் தங்கள் எல்லைகளை வகுத்துக்கொண்டு, அந்தத் தாயின் சிறகுகளில் அடைக்கலாமாய் குவிந்திருக்கும்  இந்த ஏழு பிள்ளைகளையும் சிகரம் தொட வைத்த அந்த தாய், உண்மையில் அந்த ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தத் தாய் அல்ல. பெற்றெடுத்த தாய்  இறவனடி சேர, தத்தளித்தக் குழந்தைகளுக்குத் தாயாய் வந்தவர்.

  பெயர் செல்லம்மா ஆறுமுகம் எனும் சரோஜினி நாயுடு. மலேசிய முன்னொடி பெண் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். தன் படைப்பின் வழி தனி கவனம் ஈர்த்தவர். மலேசிய எழுத்துலகுக்கு இவர் சரோஜினி நாயுடு என்றே அறிமுகமானவர்.  இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு அல்ல இவர். அவர் கவிதையால் வாழ்வை அழகாக்கியவர். இவர் தன் வாழ்வியலால் பிள்ளைகளை அழகாக்கியவர்.

நாடறிந்த எழுத்தாளரும், மலேசியாவின் புதுக்கவிதை முன்னோடியுமான காஜாங் சி.கமலநாதனின் துணைவியாராக அவரைக் கரம்பிடித்து, கணவரின் எண்ணத்திற்கிணங்க தன் வாழ்வையே தியாகமாக்கி தன் அர்த்தமுள்ள வாழ்க்கையால் அகல் விளக்காய் ஒளிர்பவர்.

காஜாங் சி.கமலநாதனின் இரண்டாவது மனைவிதான் சரோஜினி நாயுடு. முதல் மனைவி சீதா லெட்சுமி  7 பிள்ளைகளைப் பெற்றுக்கொடுத்துவிட்டு 27 வது வயதில் இறைவனடி சேர, ஏழு பிள்ளைகளுடன் திக்கற்று நின்ற கமலநாதனை  கரம்பிடித்தார் சரோஜினி நாயுடு.

கமலநாதன் தலைமை ஆசிரியராய் இருந்தவர். முதல் மனைவியைப் பறிகொடுத்துவிட்டு சொல்லொணாத் துயரில் தவித்துக்கொண்டிருந்தார்.  பிள்ளைகள் எழுவரும் பாட்டியின் கவனிப்பில் இருந்தாலும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார் பாட்டி. கமலநாதனோ பிள்ளைகளை விட்டு ஊர் ஊராய் வெகு தூரத்திற்கு மாறிக்கொண்டே இருந்தார்.  தன் மனைவி இறந்த மூன்று வருடங்களுக்குப் பிறகு தன் தாயாரின் நிலையையும், பிள்ளைகளின் நிலையையும் உணர்ந்த அவர், மறுமணம் செய்ய முடிவெடுத்து  செல்லம்மா ஆறுமுகம் எனும் சரோஜினி நாயுடுவை அணுக,  அவரின் தவிப்பை உணர்ந்தவராய், அவரோடு கரம் கோர்த்தார் சரோஜினி நாயுடு.

ஏழு செல்வங்களும் உன் பொறுப்பு. அவர்கள்தான் நம் எல்லாமே.... எனவே அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டியது நம் பொறுப்பு. இரண்டாம் தாரம் என்ற எண்ணம் கொஞ்சமும் வந்துவிடமால் அன்னையாய் அவர்களுக்கான இடத்தை நிரப்ப வேண்டும் என கமலநாதன் வேண்டுகோள் வைக்க.... அதையே தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டு “இந்த ஏழு பிள்ளைகளே என் பிள்ளைகள்; எனவே நான் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள மாட்டேன். இவர்களுக்காகவே என்னை அர்ப்பணிப்பேன்என்று சரோஜினி நாயுடு நம்பிக்கை கொடுக்க.... தொடங்கியது ஒரு தியாகத் தாயின் வரலாறு...

அப்பா ஆறுமுகம் கவுண்டர் - அம்மா பாக்கியம் தேவருக்கு சிரம்பானில் மகளாகப் பிறந்தவர்  செல்லம்மா என்கிற சரோஜினி நாயுடு. பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் படித்தவர். காஜாங் சி கமலநாதனின் முதல் மனைவி சீதா லெட்சுமியும், சரோஜினி நாயுடுவும் ஒன்றாகப் படித்தவர்கள்; பள்ளித் தோழிகள்.

 ஊனமுற்றோர், வீடற்ற குழந்தைகள் மற்றும் வயதான குடிமக்களை நிர்வகிக்கும் நலன்புரி இல்ல ஊழியராக சிரம்பானில் பணியாற்றினார் சரோஜினி நாயுடு. பின்னர் தனது தாயாருடன் வேலை வாய்ப்புக்காக சிங்கப்பூர் சென்றார். 1969 – ஆம் ஆண்டு சி.கமலநாதனை சிங்கப்பூரில் மணந்துகொண்டார். அதன் பிறகு  ஏழு பிள்ளைகள் மட்டுமே தன் உலகம் எனத் தன் எல்லைகளைச் சுருக்கிக்கொண்டு குழந்தைகளுக்காக வாழத் தொடங்கினார் சரோஜினி நாயுடு.

இயல்பிலேயே தமிழ்ப்பண்பாட்டின் கூறுகளைச் சிறிதும் சிதைக்காத பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்தவர் என்பதால், அதை அப்படியே தனது ஏழு பிள்ளைகளுக்கும் கடத்தி, நன்னெறிகளால் தன் பிள்ளைகளை ஒழுங்குபடுத்தினார்.  அந்த ஒழுக்கமும், பண்பாடும் இன்னும் பேரப்பிள்ளைகள் வரைக்கும் தொடர்வது கூடுதல் சிறப்பு. தமிழின் மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீது தீராப் பற்று இருந்ததனால் மலேசியத் தமிழ் வம்சாவளியின் நல்வாழ்வுக்குத் தன் சமூகச் சேவைகளால் வெளிச்சம் கொடுத்தார். அவரின் பேரன்பிலும், கருணையின் சுரப்பிலும் நல்வாழ்வு பெற்றனர் கணவரும் – குழந்தைகளும்.

தனது ஏழு பிள்ளைகளையும் சான்றோர்களாக்கி மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில் விடாப்பிடியாய், விடா முயாற்சியுடன் இயங்கினார். அவரின் அசரா உழைப்பின் விளைபயனாய் அத்தனை பேருமே சாதனை படைத்து தனது தாயாரைப் பெருமைப்படுத்தினர். இன்று உயரிய பதவிகளில் ஒவ்வொருவரும் தனித்திறனுடன் மிளிர்கிறார்கள்.

அந்த அன்னையின் அக்கறையில்  தரமான பிள்ளைகள்: Dr. அன்பழகன் (Specialist Infectious disease, MRCP, FRCS (UK)), திருமதி பவானி ராஜசேகர்  ( Fmr, Bank system analyst officer), ராஜசேகரன் குப்புசாமி (Retired. United Nations Technical Advisor in Disaster Response Humanitarian & Infrastructure projects. Served in Asia, the Middle East, Iraq - Syria, Afghanistan, Nepal, Bangladesh (Rohingya refugee camp), பரணிகுமார் குப்புசாமி (Malaysian Air Force, firefighter technical team), முருகதாஸ் ரமணி குப்புசாமி (Retired Malaysian Armed forces, SWAT special weapons team), நாராயணமூர்த்தி குப்புசாமி  (Retired Bank Manager in USA Bank of America),  ரகுநாதன் குப்புசாமி  (Robotics heavy engineering consultant engineer)

சித்தி அம்மாவாகி, அம்மாவுக்கு நிகராக அதிக அக்கறையில் பிள்ளைகளைக் கரை சேர்த்து இன்று உன்னத மனிதர்களாய் ஜெயிக்க வைத்திருப்பது அன்பின் உன்னதத்தைக் கட்டுகிறது. வாழ் நாள் முழுக்க தன் ஏழு பிள்ளைகளுக்காக தன் வயிற்றில் கருவைச் சுமக்காத இந்தத் தாய், உண்மையில் ஒரு தியாகத் தாய்தான்.

பிள்ளைகளுக்கு என்று மட்டும் இல்லாமல் பேரப்பிள்ளைகளுக்கும் இன்று வரை கல்வியிலும், வாழ்வியல் நியதிகளைச் சொல்லிக்கொடுப்பதிலும் சிறந்த குருவாக இருந்து போதிப்பதோடு, தனது ஓய்வூதியத் தொகையைப் பேரப்பிள்ளைகளின் கல்விக்காகவே செலவிடுகிறார். சுயநலம் கொஞ்சமும் இல்லாமல் இன்னமும்  தன் பிள்ளைகள், தன் பேரப்பிள்ளைகள், தன் சமுதாயம் என்று நிற்காமல் 90 வயதைக் கடந்தும் சுழன்றுகொண்டே இருக்கிறது இந்த அன்பின் மனம்.

தனக்குச் சமூகம் மீது எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறதோ.... அதே போல் தன் பிள்ளைகளும் சமூகத்தைக் கருணையோடு அணுக வேண்டும். சமூகத்திற்காக அவர்களது பட்டமும் பதவியும் பயன்பெற வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர் இந்தத் தியாகத் தாய்.

ஏழ்மையில் இருக்கும் தமிழ்ச் சமூகம் பொருளாதாரத்தில் மேன்மை பெற வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். புலம்பெயர்ந்து வந்த இந்த தேசத்தில் வளமாக வாழ வேண்டும் என அதற்கான வேலைகளைச் செய்து வருகிறார். கல்வி ஒன்றே பிரதானம் என்பதை நம் சமுதாயம் முழுதாய் உணர்ந்து, படிப்பறிவு மிக்க சமுதாயமாக நாம் தரமாக வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்குக் கல்வி வாய்ப்புகள் அமைந்து, அவர்கள் சமுதாயத்தின் விடியல்களாக மாற வேண்டும். நம் பிள்ளைகள் இன்றைய நவீன காலத்திற்கேற்ப புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு மேம்பட வேண்டும்.  குறிப்பாக STEM எனப்படும் அறிவியல் தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் சிறந்த விளங்க வேண்டும். AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு போன்ற அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு நம் சமுதாயத்தின் எதிர்காலப் பிள்ளைகள் தயாராக இருக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை தன் பிள்ளைகள் மட்டுமின்றி சமுதாயத்தின் கல்விமான்கள், தொழிலதிபர்கள் வழங்க முன்வர வேண்டும் என்கிறார்.

அதற்கு ஏற்றார்போல் இவரது மகன் ராஜசேகரன் குப்புசாமி தன்முனைப்பு பேச்சுகள் மூலம் நாளைய சமூகத்திற்கு வழிகாட்டி வருகிறார். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பொது நிகழ்வுகள் என அவரின் அனுபவமிக்க பேச்சுகள் நாளைய சமுதாயத்திற்கு நம்பிக்கையூட்டிக்கொண்டிருக்கிறது.

மூத்த மகன் டாக்டர் அன்பழகன் Infectious disease நிபுணராக உலகின் தலைசிறந்த பத்து மருத்தவர்களில் ஒருவராய் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருப்பதோடு, தன் அனுபவத்தால் இந்த தேசத்தின் நலனில் இணைந்துள்ளார். மற்ற பிள்ளைகளும் தேசப்பற்றோடும், சமுதாயப் பற்றோடும் தங்களுக்கான சேவைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

தாய் சொல்லைத் தட்டாத பிள்ளைகளாய், தாய் தந்த ஒழுக்கத்தோடும், தமிழோடும் சமுதாயத்தின் மீது அதிகப் பிரியத்தில் இருக்கிறார்கள் இவர்கள்.

உண்மையில் சித்தி என்கிற இந்த கருணைத் தாயின்  தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும், தூரநோக்குச் சிந்தனையும் நம் எல்லாருக்குமான பாடம் என்பதில் ஐயமில்லை.

இந்த அன்பின் விருட்சத்தில் அழகாகட்டும் நம் சமூகம்,

இன்று தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவரின் மகிழ்ச்சியும், கருணையும் தொடர்ந்து நீடிக்கட்டும் – வாழ்த்துகள்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *