திறமையானவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்

top-news
FREE WEBSITE AD

நான்கு வயதில் தனது ஆடல் கலையைக் கண்டறிந்து பல மேடைகளில் நடனமாடிய மணிராஜூ பத்துமலைதான் இன்று எம்ஆர்பி பிரதர்ஸ் நடன குழுவை நடத்தி வருகிறார். யுத்த மேடையில் தனது நடன பயணத்தைத் தொடங்கிய அவர், பிறகு பல மேடைகளில் ஆடியதோடு பல வகையான நடனங்களையும் கற்று வந்துள்ளார்.

மணிராஜு டக்‌ஷா கலை அகாடமியின் மாணவராகத் தனது நடனப் பயணத்தைத் தொடர்ந்தார்.  அகாடமியுடனான தனது பயணம் முழுவதும், அவர் ஏராளமான இசை நிகழ்ச்சிகள், திருமணங்கள், வர்ணம் லைவ் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைவிழா போன்ற நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது கடின உழைப்பின் காரணமாக, அவர் டக்‌ஷா கலை அகாடமியின் நடன இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். 





கோவிட் காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் முடங்கி இருந்த பொழுது, தனது நடனத்தின் வழி வருமானத்தை ஈட்டலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. வீட்டேகே சென்று சப்ரைஸ் டெலிவரி  செய்யும் முறையில் தனக்கென்று ஒரு நடன குழுவை அமைத்து, அதன் வழி தனது நடன சேவையைச் செய்து வந்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட எம்ஆர்பி பிரதர்ஸ் நடன குழுதான் இன்று அனைவரின் மத்தியில் பிரசித்தி பெற்று வரும் ஒரு நடன குழுவாக அமைந்தது. மணிராஜூ பத்துமலை ஒரு சமூக ஊடக செல்வாக்கு மிக்கவராகவும் மகத்தான புகழைப் பெற்றதோடு  தனது சமூக ஊடக இருப்பு மூலம் பல்வேறு பார்வையாளர்களிடமிருந்து ஆதரவையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிட்டத்தட்ட 80 மாணவர்களுக்கு நடன வகுப்பையும் ஷூம்பா வகுப்பையும் நடத்தி வருகிறார் மணி ராஜூ.

பொதுவாக, இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வீணாக நேரத்தை போக்குபவர்கள் என்று கூறும் சமூகத்திற்கு மத்தியில், இக்குழுவின் இளைஞர்கள் அனைவரும் தங்களின் ஆட்டத் திறமையால் வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்து காண்பிப்பதே இவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளது. நடனத்தின் வழி ஒழுக்கமும் நன்னடத்தையும் சீரமைக்கப்படும் என்பதற்கு எம்ஆர்பி பிரதர்ஸ் நடன குழு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறது. நடனத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி சிகை அலைங்காரம், உடைகளுக்கு எப்பொழுது இரண்டாவது இடமே தந்து வருகின்றனர் எம்ஆர்பி பிரதர்ஸ் நடன குழுவினர். குறிப்பாக, நம் பாரம்பரிய கலாச்சார உடைகளை மட்டுமே பெரும்பாலும் அவர்கள் அணிவதாகவும் அதையே மக்கள் விரும்புவதாகவும் கூறினர்.

எம்ஆர்பி பிரதர்ஸ் நடன குழுவின் வழி ஃப்ரீஸ்டைல், நாட்டுப்புற, கிளாசிக்கல் நடனம் உட்பட பல்வேறு வகையான நடனங்களை ஆடி வருகின்றனர். அவ்வகையில் மணிராஜூவுடன் இணைந்து கிஷேன்குமார் சிவகுமார், யோகராஜா ராமு, ஐயப்பன் ஸ்ரீதரன், மணிசெல்வன் மணிமாறன், டர்வின்ராஜ் முருகன், முரளிதரன் நரேந்திரன், டர்வின்ராஜ் ராஜ்மோகன் ஆகியோர் ஒரு குழுவாக நடனமாடி வருகின்றனர். 

மணிராஜூ ஆஸ்ட்ரோ யூத்த மேடை ளு10-இல் முதல் இடத்தைப் பிடித்தார். அதோடு, 2017ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ யூத்த மேடை ஜூனியரில் 4ஆவது இடத்தையும் 2019ஆம் ஆண்டு பெர்ஜெயா டீன் ஸ்டார் சேலஞ்சில் முதல் இடத்தையும் பிடித்தார். அவரின் வெற்றி படிகள் அதோடு நின்றுவிடாமல் 2023ஆம் ஆண்டு னுறுனு விருதுகளால் சமூக ஊடக சென்சேஷன் விருதால் கௌரவிக்கப்பட்டது. அதோடு, எம்ஆர்பி நடனக் குழு பிக் பாஸ் கிளப்பின் ஜோடி நம்பர் 1 நடனப் போட்டியில் முதல் இடத்தையும் காவலா நடனச் சவாலில் 2023ஆம் ஆண்டு  முதல் இடத்தையும் வாகை சூடியது. மேலும்,  2023ஆம் ஆண்டு பிரபு தேவா ஏற்பாடு செய்த, லெட்ஸ் ஸ்டெப் இட் அப் நிகழ்ச்சியிலும் முதல் இடத்தைப் பிடித்தனர்.



மேலும், 2022ஆம் ஆண்டு அபாக்ஸ் ஸ்பெஷியல் டான்ஸ் ஜோடி டான்ஸ், 2023ஆம் ஆண்டில் பயணம்@ ஐலேண்ட் ஆஸ்ட்ரோ கேம் ஷோ, ஆஸ்ட்ரோ சரவெடி நைட், பிரபல நடனக் கலைஞருக்கான நம்பிக்கை விருதுகள், லிட்டே பாலிவுட் ஃபேஷன் போட்டி ஆகியவற்றிலும் பங்கேற்றுள்ளனர் எம்ஆர்பி நடன குழுவினர்.

தற்பொழுது பலர் சமூக ஊடகங்களை குறிப்பாக டிக் டாக்கை மிகவும் தவறான வழியில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், டிக் டாக் தளம் என்பது திறமையை வெளிப்படுத்தக்கூடிய மிகப்பெரிய இடமாகும். இந்த டிக் டாக் தளத்தைக் கொண்டுதான் நாங்கள் எங்களின் திறமையை மக்களின் மத்தியில் வெளிக்கொண்டுவந்து நிலை நிறுத்தி வருகிறோம் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

சமூக வலைத்தளங்களைத் தவிர்த்து மலேசியாவில் இந்தியர்களுக்கென தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. ஆனால், அந்த அலைவரிகள் அனைத்தும் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில்லை. புதுமுகங்களை அறிமுகப்படுத்தினால் மட்டுமே எங்களைப் போன்ற திறமை உள்ளவர்களின் திறன்கள் வெளிக்கொண்டு வரப்படும்.

விஜய் டீவி, ஜீ தமிழ் ஆகிய அலைவரிசைகள் புதிய புதிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வருவதோடு பல திறமையானவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றன. அவ்வாறு நம் மலேசியாவில் நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று மணிராஜூ கூறினார். கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இல்லாததன் காரணமாகவே, ஒவ்வொரு வருடமும் நாங்களே எங்களீன் குழுவினர்களுக்கிடையே சிறந்த நடனமாடுபவரைத் தேர்வு செய்து விருதும் வழங்கி வருகிறோம்.

இவ்வேளையில், இந்த நான்கு வருடப் பயணத்தில் என்னுடைய பாட்டி எனக்கு மிகப் பெரிய ஆறுதலாகவும் உந்துகோலாகவும் இருந்துள்ளார். அவர் இவ்வேளையில் என்னுடன் இல்லாவிடினும் அவரின் ஆசீர்வாதமும் வழிகாட்டலும் என்னை வழி நடத்தும் என்றும் மணிராஜூ தமிழ் மலரிடம் தெரிவித்தார். அவரோடு, இதுவரை ஆதரவு தந்த ஒவ்வொரு தனிநபருக்கும் எம்ஆர்பி பிரதர்ஸ் நடன குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *