நான் இன்னும் அம்னோவில்தான் இருக்கிறேன்! -இஸ்மாயில் சப்ரி யாக்கோப்
- Shan Siva
- 11 Feb, 2026
ஜொகூர் பாரு, பிப் 11: முன்னாள் பிரதமரும் அம்னோ முன்னாள் உதவித் தலைவருமான இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தாம் இன்னும் அம்னோவில் செயலில் உள்ள உறுப்பினராக இருப்பதாகவும், ஆனால் தேசிய அரசியலின் பிரதான ஓட்டத்தில் தற்போது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
லார்கின் ஜெயாவில் சீனப் புத்தாண்டு உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் பெரா நாடாளுமன்ற உறுப்பினராகவும், பெரா அம்னோ தலைவராகவும் தொடர்ந்து தனது கடமைகளை ஆற்றி வருவதாக கூறினார்.
வரும் 16-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ-16) பெரா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, அதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும என்றும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
யாயாசான் கெலுவார்கா மலேசியா தலைவர் என்ற வகையில், தற்போதைய தனது முக்கிய கவனம் உதவித் தேவையுள்ள மக்களுக்கே, குறிப்பாக குழந்தைகளுக்கே என அவர் விளக்கினார்.
கோவிட்-19 காரணமாக பெற்றோர்களை இழந்த சுமார் ஆயிரம் குழந்தைகளுக்கு உதவுவதில்தான் தற்போது தாம் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
கடந்த 2022 பொதுத் தேர்தலில், இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர்களை தோற்கடித்து, 16,695 வாக்குகள் பெரும்பான்மையுடன் பெரா நாடாளுமன்றத் தொகுதியை ஐந்தாவது முறையாக தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



