புரிராம் யுனைடெட்டிடம் தோல்வி: ஏமாற்றத்தில் ஜேடிதி பயிற்சியாளர் சிஸ்கோ முனோஸ்
- Surendran Sumdraraj
- 07 May, 2026
ஜொகூர், மே 7-
ஆசியான் கிளப் சாம்பியன்ஷிப் (ACC) ஷோப்பி கிண்ண அரையிறுதி முதல் கட்ட ஆட்டத்தில் தாய்லாந்தின் புரிராம் யுனைடெட் அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜொகூர் டாருல் தக்சிம் (JDT) அணியின் தலைமை பயிற்சியாளர் சிஸ்கோ முனோஸ் மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் பாருவில் உள்ள சுல்தான் இப்ராஹிம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஜேடிதி ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், எதிரணியின் அதிவேக எதிர்தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் பின்னடைவைச் சந்தித்தது.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முனோஸ், “இந்த ஆட்டம் முந்தைய போட்டிகளிலிருந்து மாறுபட்டது. இடது மற்றும் வலது பக்கங்களில் பந்தை நகர்த்தி, நடுப்பகுதியில் சிறந்த இணைப்புகளை உருவாக்கினோம். ஆனால் புரிராம் யுனைடெட் மூன்று கோல்களை அடித்தது. அவர்கள் வேகமான எதிர்தாக்குதல்களையும் ‘செட்-பீஸ்’ வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தினர்,” என்றார்.
மேலும், “சில நேரங்களில் கால்பந்து கடினமானது. நாம் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் முக்கிய தாக்குதல் வீரர் கில்யெர்மே பிஸ்ஸோலியின் திறமை குறித்து போட்டிக்கு முன்பே எச்சரித்திருந்தேன். அவருக்கு இடம் கொடுத்ததால் அவர் அதை பயன்படுத்தி இரண்டு கோல்கள் அடித்தார்,” என்றும் கூறினார்.
இந்த தோல்வியால் இறுதிப்போட்டிக்கான ஜேடிதியின் வாய்ப்பு சிக்கலான நிலையில் உள்ளது. இருப்பினும் அடுத்த கட்ட ஆட்டத்தில் மீண்டும் எழுச்சி காண அணி தீவிரமாகத் தயாராகும் என ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



