இந்தியர்கள் - சீனர்கள் நமது தேசத்தின் பலம்! அவர்களைப் புறக்கணிப்பதா? சனுசிக்கு அன்வார் கடும் கண்டனம்
- Shan Siva
- 25 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 25: மலேசியாவில் உள்ள பல்வேறு இனக்குழுக்கள், நாட்டிற்கு வெளியே உள்ள தங்கள் மூதாதையர் தாயகங்களுக்குச் செல்லலாம் என்று கூறிய பெரிகாத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குனர் சனுசி நோரை பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடியுள்ளார்.
மற்ற இனங்களைப் புண்படுத்தக்கூடிய கருத்துக்களை எந்தத் தலைவரும் வெளியிடக்கூடாது என்று பக்காத்தான் ஹரப்பான் தலைவருமான அவர் கூறினார்.
மலேசிய சீன மற்றும் மலேசிய இந்திய சமூகங்கள் அரசியலமைப்பை மதிக்கின்றன. மேலும் அவர்கள் விசுவாசமான குடிமக்களாக உள்ளனர். இதை நாம் நமது தேசத்தின் பலமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
நமது நாட்டில் எந்தவொரு இனமும் ஆற்றிய பங்கை அவமதிக்கும் அல்லது புறக்கணிக்கும் எந்தவொரு கூற்றையும் தாம் முற்றிலும் எதிர்ப்பதாக அவர் இன்று புக்கிட் மெர்தாஜாமில் உள்ள பெராபிட்டில் SMK அகாமா ஷேக் தாஹிர் ஜலாலுதீன் பள்ளியைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான ஒரு பிரச்சார மேடையில் சனுசி தெரிவித்த கருத்துக்களுக்காக பல தலைவர்களிடமிருந்து அவர் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பாஸ் கெடா மந்திரி பெசாரான சனுசியை, ம.இ.கா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனும் விமர்சித்திருந்தார். அவர், ஆகஸ்ட் 11 தேர்தல்களுக்காக பெரிகாத்தான் உடனான தனது கூட்டணியை பாரிசான் நேஷனல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
பெரிகாத்தான் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் பி. புனிதனும் சனுசியின் கருத்துக்களை நிராகரித்தார். மலேசியாவை மட்டுமே தனது தாயகமாகக் கருதுவதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



