பந்திங்கில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, நால்வர் காயம்!
- Muthu Kumar
- 25 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 25-
சிலாங்கூர், பந்திங்கில் உள்ள பந்தாய் மோரிப்பில் நேற்று காலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் நால்வர் காயமுற்றனர்.காயமுற்ற நான்கு வெளிநாட்டுக்காரர்களுள் மூவருக்கு சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் (செர்பாங் மருத்துவமனை) வெள்ளிக்கிழமை காலையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் பந்தாய் மோரிப் அருகே அச்சம்பவம் நடைபெற்றது என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் ஒமார் கான் குறிப்பிட்டார்.துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்திருப்பதையும் நால்வர் காயமடைந்திருப்பதையும் மட்டுமே என்னால் இப்போதைக்கு உறுதிப்படுத்த முடிகிறது.
காயமுற்ற ஒருவர் கிள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.மற்ற மூவர் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கோலலங்காட் மற்றும் சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் புலன்விசாரணை நடத்தி வருகின்றனர் என்று உசேன் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான மூன்று வெளிநாட்டினர் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று அதற்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது.
இந்தோனேசியர்கள் எனக் கருதப்படும் அம்மூவரையும் அடையாளம் தெரியாத ஒருவர் காலை 7.30மணிக்கு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளார்.அந்த மூவரில் ஒருவர் நனைந்த ஆடைகளுடன் காணப்பட்டார். மற்றொருவர் குத்துச் சண்டை வீரர்கள் பயன்படுத்தும் கால்சட்டையை (ஷார்ட்ஸ்) அணிந்திருந்தார். அவர்களிடம் அடையாளப் பத்திரங்களும் காணப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த மூவரும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து மருத்துவமனையில் முரண்பாடான தகவல்களைத் தெரிவித்ததாகவும் அவை கூறின.இதனிடையே, மருத்துவமனைத் தரப்பில் போலீசில் புகார்செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



