மனிதனின் கற்பனைக்கு ஓலோ என்ற புதிய நிறம் கண்டுபிடிப்பு!

- Muthu Kumar
- 24 Apr, 2025
மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட 'ஓலோ' என்ற புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை மனித கண்களால் கண்டிராத ஒரு முற்றிலும் புதிய நிறத்தைக் கண்டுபிடித்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.கடந்த ஏப்.18ஆம் தேதி "சயின்ஸ் அட்வான்சஸ்" அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி, ஆராய்ச்சியாளர்கள் இந்த விசித்திரமான நிறத்திற்கு 'ஓலோ'(OLO) என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு, வண்ணங்களின் அறிவியல் மற்றும் மனித பார்வையின் எல்லைகள் குறித்த நமது புரிதலை ஆழமாக மாற்றியமைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த அதிசய நிறத்தை இதுவரை வெறும் 5 விஞ்ஞானிகள் மட்டுமே நேரில் பார்த்துள்ளனர். அவர்கள் இந்த 'ஓலோ' நிறத்தை மயக்கும் மயில் நீலம் (அ)டீல் நிறத்தின் ஒரு தனித்துவமான, இதுவரை கண்டிராத கலவையாக விவரிக்கின்றனர். இந்த வர்ணனை, ஏற்கனவே இருக்கும் வண்ணங்களின் சாயல்களைக் கொண்டு மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், 'ஓலோ'வின் உண்மையான அனுபவம் இதைவிட முற்றிலும் மாறுபட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 'ஓலோ' நிறத்தின் தனித்துவம் என்னவென்றால், சாதாரண மனித கண்களால் இதை உணர முடியாது. அதிநவீன லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விழித்திரையை மிக நுட்பமாக கையாண்டதன் மூலமே ஆராய்ச்சியாளர்கள் இந்த புதுமையான வண்ண அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் இந்த புதுமையான வண்ண அனுபவத்தைப் பெற்றுள்ளனர். இதற்காக, அவர்கள் தங்கள் கண்களில் துல்லியமான லேசர் ஒளித்துடிப்புகளை செலுத்தி, தற்காலிகமாக பார்வையின் இயல்பான வரம்புகளை விரிவுபடுத்தி இந்த அபூர்வமான வண்ணத்தை தரிசித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "இதுவரை நாம் கேள்விப்பட்டிராத, பார்த்திராத ஒரு புதிய வண்ண சமிக்ஞை போல இருக்கும் என்று நாங்கள் ஆரம்பத்தில் கணித்தோம். ஆனால், மனித மூளை இதற்கு எப்படி எதிர்வினையாற்றும் என்று எங்களுக்குத் துளியும் தெரியாது. அந்தப் புதிய நிறத்தை பார்த்தபோது நாங்கள் அடைந்த அதிர்ச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அது நம்பமுடியாத அளவிற்குப் புதுமையாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருந்தது," என்று தங்கள் வியப்பை வெளிப்படுத்தினர்.
மேலும் அவர்கள், "'ஓலோ'வின் உண்மையான தோற்றத்தை ஒரு கட்டுரையிலோ (அ) அதிநவீன கணினி திரையிலோ கூட அப்படியே காட்சிப்படுத்த எந்த வழியும் இல்லை. நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு நிறமும் ஒளியின் அலை நீளங்களின் ஒரு குறிப்பிட்ட பிரதிபலிப்புதான். ஆனால் 'ஓலோ'வின் நேரடி அனுபவத்துடன் ஒப்பிடும்போது, நாம் தற்போது பார்த்து ரசிக்கும் வண்ணங்கள் மிகவும் மங்கலானவை, ஒரு நிழல் போன்றது," என்று விளக்கினர்.
எந்த ஸ்மார்ட்போன் திரைகளிலோ (அ) அதிநவீன தொலைக்காட்சிகளிலோ கூட 'ஓலோ'வைப் பார்க்க முடியாது என்று விஞ்ஞானிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தொழில்நுட்பம் தற்போது உள்ள விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட் தொழில்நுட்பத்திற்கும் எட்டாத தொலைவில் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த புதிய நிறத்தின் உணர்வை ஓரளவு புரிய வைப்பதற்காக, ஆராய்ச்சியாளர்கள் டர்க்கைஸ் நிறத்திலான ஒரு சதுரத்தின் தோராயமான படத்தை பகிர்ந்துள்ளனர். இருப்பினும், அந்தப் படம் தாங்கள் உண்மையில் அனுபவித்த அந்தப் புதிரான நிறத்தை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றும் விஞ்ஞானிகள் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *