முஸ்லிம் அல்லாதாரின் நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரம்!

- Muthu Kumar
- 08 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 8-
தனது கொள்கைகள் அனைத்தும் தேசிய ஒற்றுமையை கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.அக்கொள்கைகளுக்கு அமைச்சரவையின் ஒப்புதலும் அவசியமாகும் என்று அரசாங்கம் நேற்று வலியுறுத்தியது. முஸ்லிம் அல்லாதாரின் விழாக்கள். இறுதிச் சடங்குகள் அல்லது முஸ்லிம் அல்லாதார் வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்துகொள்ள முஸ்லிம்களுக்கு உத்தேச வழிகாட்டிகள் வெளியிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசாங்கம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
அந்த வழிகாட்டிகள் குறித்து குறிப்பாக அந்தப் பரிந்துரையினால் எழுந்துள்ள குழப்பம் குறித்து நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் ஏரன் அகோ டாகாங் மற்றும் சமய விவகார அமைச்சர் நயீம் மொக்தார் ஆகியோர் தெரிவித்தனர்.சமய அம்சங்களுடன் கூடிய முஸ்லிம் அல்லாதாரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அது குறித்து முஸ்லிம்கள் பலர் விளக்கம் கேட்டதைத் தொடர்ந்து ஜாக்கிம் எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டுத்துறை (ஜாக்கிம்) இந்த வழிகாட்டிகளைத் தயாரித்தது என்றும் அந்த அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.
இந்த விவகாரம் பல்வேறு இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மலேசியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதைக் கருத்தில் கொண்டு தங்களின் சமய நம்பிக்கையைப் பேணிவர முஸ்லிம்களுக்கு ஜாக்கிம் அறிவுரைகள் வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்தது. அதே நேரத்தில், அந்த அறிவுரைகள் அரசாங்கக் கொள்கைகளாக கருதப்படாது. ஒவ்வொரு கொள்கையும் வகுக்கப்படும்போது தேசிய ஒற்றுமை அம்சத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதற்கு முதலில் அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்று அனைவருக்கும் அமைச்சரவை நினைவூட்டுகிறது என்று ஏரன் அகோவும் நயீமும் தெரிவித்தனர்.இதனிடையே, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கோரப்படும். சர்வ சமய நல்லிணக்கக் குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்படும். ஜேகே ஹார்மனி என அழைக்கப்படும் இக்குழு இவ்வாண்டுக்கான தனது முதல் கூட்டத்தை இம்மாதத்தில் நடத்தவுள்ளது.
இஸ்லாம், பௌத்தம், இந்து சமயம், கிறிஸ்துவம், சீக்கியம், தாவோயிசம், பஹாய் உட்பட இருபத்து நான்கு சமயப் பேராளர்களின் கருத்துகள் இதில் செவிமடுக்கப்படும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *