அன்வார் - புதின் இந்தியாவில் சந்திப்பு!
- Shan Siva
- 12 Sep, 2026
புதுடெல்லி, செப் 12: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இருதரப்பு சந்திப்பாக நேற்று இரவு சந்தித்தார்.
இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே அண்மைய ஆண்டுகளில் எட்டப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் விரைந்து செயல்படுத்துவதற்காக, புத்ராஜெயாவுக்கும் மாஸ்கோவுக்கும் இடையே சிறப்பு செயல்முறை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற அன்வாரின் பரிந்துரைக்கு புதின் ஒப்புதல் தெரிவித்தார்.
இதில் மலேசியாவின் செம்பணை எண்ணையை, ரஷ்யா இறக்குமதி செய்வது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையை ஏற்படுத்துவது உள்ளிட்ட ஒப்பந்தங்களும் அடங்கும்.
இரவு 11 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பு, மலேசியா-ரஷ்யா உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடவும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை வகுக்கவும் வாய்ப்பளித்ததாக அன்வார் தெரிவித்தார்.
மலேசியா மற்றும் ரஷ்யா இடையே நேரடி விமான சேவையை விரைவுபடுத்துவதுடன், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விசா இல்லா பயண ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகரிக்கும் என அவர் கூறினார்.
மேலும், ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் மற்றும் மலேசியாவின் பெட்ரோனாஸ் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மூலம் எரிசக்தித் துறையில் ரஷ்யா வழங்கி வரும் ஆதரவுக்கும் அன்வார் நன்றி தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த ஆண்டு ரஷ்யா-மலேசியா இடையிலான வர்த்தகப் பரிமாற்றம் 12.9 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.
கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் மலேசியாவுடனான உறவுகளுக்கு ரஷ்யா அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் அன்வார், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் 18ஆவது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை புதுடெல்லி சென்றடைந்தார்.
2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் பிரிக்ஸ் அமைப்பின் பங்குதாரர் நாடாக மலேசியா செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



