மளிகைக் கடையில் கத்திமுனையில் கொள்ளை! நிபோங் தெபாலில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்
- Shan Siva
- 03 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 3: பினாங்கு, நிபோங் தெபாலில் உள்ள ஒரு மளிகைக் கடையில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை தேடி வருகிறது. இந்தக் கொள்ளையில் 27 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமான் பெஸ்தாரி, ஜாலான் சுங்கை டாவுனில் உள்ள ஈஸி டூ யூ மார்ட் கடையில் நடந்த கொள்ளை குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக செபராங் பிராய் தெற்கு பகுதி காவல்துறை துணைத் தலைவர் நோராஸ்மி அப்துல் கபார் தெரிவித்தார்.
இரவு 9.29 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்டவர் பாராங் கத்தியால் தாக்கப்பட்டதாகவும், அவரது தலை மற்றும் இரு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் நோராஸ்மி கூறினார். இந்தக் கொள்ளையின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சந்தேக நபர்கள் பணம், பல பெட்டி சிகரெட்டுகள் மற்றும் ஒரு பையுடன் தப்பிச் சென்றனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்பத்தில் சுங்கை பாகாப் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் செபராங் ஜெயாவில் உள்ள சன்வே மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டதாக நோராஸ்மி கூறினார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்தவுடன் காவல்துறை விசாரணையைத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



