ஆள் கடத்தல் தொடர்பான சண்டையில் வெளிநாட்டினர் இருவரை போலீஸ் சுட்டுக்கொன்றது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,ஆக 8: கெடா, அலோர் ஸ்டார், தெலகா பாத்தா, தமான் அமிரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடத்தப்பட்ட இருவரை மீட்கும் நடவடிக்கையின் போது, ​​நேற்று இரவு காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், வெளிநாட்டினர் என நம்பப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர்.

இரவு சுமார் 8.40 மணியளவில், சந்தேக நபர்கள் புக்கிட் அமான் சிஐடி-யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) இயக்குநர் எம். குமார்  தெரிவித்தார்.

அச்சுறுத்தல் முறியடிக்கப்படும் வரை, அதிரடிப் படையினர் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டனர். இரவு சுமார் 9.30 மணியளவில் மருத்துவப் பணியாளர்களால் இரு சந்தேக நபர்களும் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் எந்த அடையாள ஆவணங்களும் கண்டெடுக்கப்படவில்லை என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட இருவரும் வெளிநாட்டினர் என்றும், அவர்கள் 70 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் என்றும், அவர்கள் கண்கள் கட்டப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இரு சந்தேக நபர்களுக்கு அருகே, ஐந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் கொண்ட ஒரு சுழல் துப்பாக்கி மற்றும் ஒரு நீண்ட அரிவாள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கண்டெடுத்ததாக குமார் கூறினார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் பல சோதனைகளை நடத்தி, கெடா, பினாங்கு மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட, ஒரு உள்ளூர் நபர், நான்கு வெளிநாட்டு ஆண்கள் மற்றும் ஒரு வெளிநாட்டுப் பெண் உட்பட ஆறு நபர்களைக் கைது செய்ததாக அவர் கூறினார்.

இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும், விசாரணையில் தலையிடக்கூடிய அல்லது உண்மைகளைத் திரித்து, தேவையற்ற பொதுக் கவலையை ஏற்படுத்தக்கூடிய யூகங்களையோ அல்லது கருத்துக்களையோ பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம் என்றும் குமார் அறிவுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *