பினாங்கு மாநில கடலோரப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள்!

- Muthu Kumar
- 08 Dec, 2024
(ஆர்.ரமணி)
ஜோர்ஜ்டவுன், டிச. 8-
பினாங்கு மாநிலத்தின் புலாவ் ஜெர்ஜாக் மற்றும் புலாவ் கஸும்போ ஆகிய இரு குட்டித் தீவுகளின் சுற்று வட்டார கடலோரப் பகுதிகளில் மலிந்து காணப்பட்ட, பெருந்திரளான நெகிழி வகைக் கழிவுகளை அகற்றும் பணியில், இங்கிருக்கும் பற்பல தொண்டூழிய அமைப்புகளைச் சார்ந்த தன்னார்வலர்கள்ஆர்வமுடன் ஈடுபட்டு, மாநில மாநகரசபையுடன் ஒருமித்த விதத்தில் நல்லிணக்கம் கண்டனர்.
நேற்று அதிகாலையில் தொடங்கி, முற்பகல் வரையில் பற்பல படகுகளின் உதவியால், இவ்விரு தீவுகளுக்கும் படையெடுத்த சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளான சுமார் 200க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள், ஏராளமானப் பைகளில் கடற் பரப்பில் மிதந்து கொண்டிருந்த நெகிழி வகைப் பொருள்களை நிரப்பி, அவற்றை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
கடந்த சில மாதங்களாக புலாவ் ஜெர்ஜாக் மற்றும் புலாவ் கஸும்போ ஆகிய இரு தீவுகளின் சுற்று வட்டார கடலோரங்களில் ஏராளமான நெகிழிப் பொருள்கள் காணப்பட்ட விவகாரம், மாநில மாநகரசபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், துரித நடவடிக்கையாக இப்பணி செவ்வனே மேற்கொள்ளப்பட்டு மேற்படி, நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக, இதற்கு தலைமை பொறுப்புதாரராக செயல்பட்ட, மாநகர மன்ற உறுப்பினர்களுள் ஒருவரான ரோஹைஸட் அஹ்மாட் தெரிவித்தார்.
நெகிழிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்களை நேரில் சந்தித்து, அவர்களை நன்றி பாராட்டி கௌரவிக்கும் பொருட்டு சம்பவ இடத்திற்கு வருகையளித்திருந்த மாநில மாநகரசபைத் தலைவர் டத்தோ அ.ராஜேந்திரன், நெகிழி வகைக் குப்பைகள், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஓர் அச்சுறுத்தலாக அமையக் கூடியது என்றும், இதற்கு இடமளிக்காமல் கடல் நீரின் பாதுகாப்புக்கு உத்திரவாதமளிப்பது ஒரு கடமையாகுமென்று குறிப்பிட்டார். கடலில் நெகிழி வகைக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை கடந்த ஆண்டு மாநகரசபை தொடங்கியபோது பற்பல தொண்டூழிய அமைப்புகள் ஆர்வமுடன் ஈடுபாடு காட்டியதையும் நினைவு கூர்ந்த ராஜேந்திரன், அவ்வண்ணமே இம்முறையும் பற்பல அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சேவையை ஆற்றிட முன் வந்திருப்பது பாராட்டத்தக்கது என்று புகழாரம் சூட்டினார். தொண்டூழிய அமைப்புகளின் பிரதிநிதிகளாக இப்பணியில் பங்கேற்றிருந்தவர்களுக்கு ராஜேந்திரன் நினைவுச் சின்னங்களை வழங்கியும் கௌரவப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *