தன்னையே கடத்திய பெண் கைது!
- Shan Siva
- 22 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 22: தனது தாயிடமிருந்து 18,000 ரிங்கிட் பணத்தைப் பெறுவதற்காக, தானே கடத்தப்பட்டதாக நாடகமாடியதாக நம்பப்படும் ஒரு பெண், விசாரணைக்கு உதவுவதற்காக 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் மற்றும் அவருடன் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் நபருக்கான நீதிமன்றக் காவல் உத்தரவை நேற்று ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பெற்றதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் கூறினார்.
நேற்று, பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், ஜொகூர் பாருவின் தமான் பெர்னியாகான் செத்தியாவில் உள்ள ஒரு வீட்டில் 'ஆபரேஷன் ஸ்கார்பியன்' எனும் சோதனையின் போது, 20 வயதுகளில் உள்ள அந்தப் பெண் பத்திரமாக மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சரவாக்கில் உள்ள படவான் காவல் தலைமையகத்தில், அடையாளம் தெரியாத நபர்களால் தனது மகள் கடத்தப்பட்டதாக அப்பெண்ணின் 43 வயது தாய் வெள்ளிக்கிழமை அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக குமார் கூறினார்.
இந்த சோதனையின் போது, போதைப்பொருள் தொடர்பான மற்றும் மூன்று குற்றவியல் வழக்குகளில் குற்றப் பின்னணி கொண்ட 27 வயது இளைஞர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கடத்தல் குறித்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்ததை முதற்கட்ட விசாரணை வெளிப்படுத்தியதாகவும், விசாரணைக்கு உதவுவதற்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் குமார் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



