வாங்க நான் உங்களைக் கைப்பிடித்துக் கூட்டிப் போறேன்! - பிரிமாஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டாக்டர் சின்னையா அழகன்
- Shan Siva
- 21 Nov, 2026
கோலாலம்பூர், நவ.21: மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கமான PRIMAS அமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான புதிய பதவிகளுக்காக இரு பிரிவினர் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'டீம் டாக்டர் சீனு' எனப்படும் இரண்டாவது அணியில், தலைவர் பதவிக்கு டாக்டர் சின்னையா அழகன் என்கிற சீனு போட்டியிடுகிறார்.
அவரது தலைமையில் அனைத்து வேட்பாளர்களும் எண் 2-இல் போட்டியிடுகின்றனர்.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பெட்டாலிங் ஜெயா சீனு உணவகத்தில் நடைபெற்றது.
தாம் தலைவராகப் பொறுப்பேற்றால் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து, சிறப்பாகச் செயல்படுவேன் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், சங்க உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைக் களைந்து, உணவக உரிமையாளர்கள் எவ்வித அச்சமுமின்றி தங்களது தொழிலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே தங்கள் அணியின் முக்கிய நோக்கம் என்று அவர் கூறினார்.
குறிப்பாக, உணவகத் துறையினர் எதிர்நோக்கும் அந்நியத் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், உணவகத் துறையில் புதிதாகத் தொழில்புரிய விரும்புகிறவர்கள் பிரிமாஸ் சங்கத்தை தாய்வீடாகக் கருதி வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.
உணவகம் தொடங்குவதற்கான நடைமுறைகள், வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் டாக்டர் சின்னையா அழகன் தெரிவித்துள்ளார்.
உணவகத் துறையில் தாம் 48 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ளதாகவும், அந்த அனுபவத்தையும், தொழில் சார்ந்த நுட்பங்களையும் உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்ட அவர், அனைவரும் தன்னுடன் இணைந்து வெற்றிப் பாதையில் பயணிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
"வாங்க நான் உங்களைக் கைப்பிடித்துக் கூட்டிப் போகிறேன்" என்று சங்க உறுப்பினர்களுக்கு அவர் நம்பிக்கையளித்தார்.
டீம் டாக்டர் சீனு அணியின் வேட்பாளர்கள் விவரம்:
1. தலைவர் – டாக்டர் சின்னையா அழகன்
2. துணைத் தலைவர் – சண்முகம்
3. உதவித் தலைவர் – லிங்கம்
4. செயலாளர் – தயாளன்
5. பொருளாளர் – பூபாலன்
துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சண்முகம், உணவக உரிமையாளர்களின் நலன்களையும் சங்கத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
'ஒற்றுமையாக இருப்போம்... ஒன்றாக உயர்வோம்' என்ற தாரக மந்திரத்துடன் களமிறங்கியுள்ள டீம் டாக்டர் சீனு அணியினர், உணவுத் தொழில்துறையின் நலன் கருதி சங்க உறுப்பினர்கள் தங்களைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

