என் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டாம்! என் மோட்டார் சைக்கிளையும், மீன்களையும் வாங்கிக்கொள்ளுங்கள் -அக்மால் சாலே

top-news

கோலாலம்பூர், அக் 22: அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலே, தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு இனி பணம் அனுப்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

டிஏபி மூத்த தலைவர் தெரேசா கோக் தொடர்ந்த அவதூறு வழக்கில் அக்மால் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 3 லட்சம் ரிங்கிட் இழப்பீடு மற்றும் வழக்குச் செலவுகளைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக உதவ விரும்பிய பொதுமக்களிடமிருந்து இதுவரை 45,102 ரிங்கிட் 18 சென் கிடைத்துள்ளதாக அக்மால் தெரிவித்தார்.

தமது ஃபேஸ்புக் பதிவில், முன்னதாகப் பகிர்ந்த வங்கிக் கணக்கு எண்ணை நீக்கியதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்களில் பலர் தமது மோட்டார் சைக்கிள் அல்லது திலாப்பியா மீன்களை வாங்குவதற்குப் பதிலாக, நிதியுதவி வழங்கும் நோக்கில் பணம் அனுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தமது சொத்துகளை விற்று முதலில் பணத்தைத் திரட்டவே விரும்பியதாகக் கூறிய அக்மால், யாருக்கும் நிதிச் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும், இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தும் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமது ஹோண்டா எக்ஸ்-ஏடிவி மோட்டார் சைக்கிளை வாங்க விரும்புவோர் தம்மை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை மெலாக்கா உயர் நீதிமன்றம் தெரேசா கோக் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. இதன்படி, அக்மால் 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பொது மற்றும் கூடுதல் இழப்பீடாகவும், 50 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவாகவும் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் விற்பனை செய்யாத உணவகங்களுக்கும் ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற முன்மொழிவைத் தெரேசா கோக் விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, 2024 செப்டம்பரில் டிக்டாக் காணொளி ஒன்றில் அக்மால் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்