சீனப் புத்தாண்டு காலத்தில் சாலைகளைப் பயன்படுத்த சரக்கு வாகனங்களுக்குத் தடை!
- Muthu Kumar
- 19 Jan, 2025
கோலாலம்பூர்,ஜன. 19-
சாலைப் போக்குவரத்து நெரிசலையும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையையும் குறைப்பதற்காக, இவ்வாண்டு சீனப் புத்தாண்டு காலகட்டத்தில் சாலைகளைப் பயன்படுத்த சரக்கு வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய தடை, இம்மாதம் 27 முதல் 28ஆம் தேதி வரைக்கும் பிப்ரவரி 1 முதல் 2ஆம் தேதி வரைக்கும் அமலில் இருக்கும் என்று, நேற்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் போக்குவரத்து அமைச்சு அறிவித்தது
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல அதிகமான மலேசியர்கள் சாலைகளில் பயணம் செய்யவிருப்பதால், தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவிருப்பதைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களினாலும் தனியார் வாகனங்களினாலும் ஏற்படுத்தப்படும் ஆபத்தான சாலை விபத்துகளையும் வாகனப் போக்குவரத்து நெரிசலையும் குறைப்பதே இத்தடைக்கான முக்கிய நோக்கம்“ என்று அவ்வமைச்சு கூறியது. இச்சாலைத் தடையுடன் சேர்த்து, போலிசாரின் “ஒப்ஸ் செலாமாட்” பாதுகாப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக இம்மாதம் 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரையில் தேசிய வேகக் கட்டுப்பாட்டைக் குறைக்கும் உத்தரவும் அமல்படுத்தப்படவிருக்கிறது.
போலிஸ் தரப்பில் “2025ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு ஒப்ஸ்" நடவடிக்கையும் நாடு முழுமையிலும் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
சாலைகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், சாலைப் போக்குவரத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றுமாறு வாகனமோட்டிகளுக்கு போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



