திறப்புவிழா கண்டது 'கொமிஸ்' கூட்டுறவுக் கழகம்! ஓம்ஸ் பா.தியாகராஜன் திறந்து வைத்தார்
- Shan Siva
- 05 Jan, 2026
பெட்டாலிங் ஜெயா, ஜன 5: கொமிஸ்
எனப்படும் சிலாங்கூர் இந்தியர் கூட்டுறவு அமைப்பின் துவக்க விழா நல்லெண்ண
விருந்துபசரிப்போடு நேற்று மாலை பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிலாங்கூரில் உள்ள இந்தியர்களின் பொருளாதார
உயர்வுக்காகவும், அவர்களின்
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இலக்காகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டுறவு அமைப்பு ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா
சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தலைமையில் திறப்பு விழா கண்டது.
ஆடல்
பாடல் விருந்துபசரிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இருவருக்கு சாதனை விருதுகள் வழங்கப்பட்டது.
சிறந்த மாணவி ஒருவருக்கு சன்மானம் வழங்கப்பட்டது. மேலும் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன், நம் நாட்டில் பல
கூட்டுறவுக் கழகங்கள் உண்டு. நம் நாட்டைப் பொருத்தமட்டில் கூட்டரசுப் பிரதேசத்தில்
அரசு கட்டிடங்கள் மற்றும் சீன வர்த்தக கட்டிடங்கள்தான் உயர்ந்து நிற்கும். அத்தகைய
சூழலில் நாமும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் அந்தக் கட்டிடங்களுக்கு மத்தியில்
ஒரே ஒரு கட்டிடம் உயர்ந்து நிற்கிறது. அது தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம்தான். துன் சம்பந்தன் கட்டிடம் என அது உயர்ந்து நிற்கிறது என்று கருத்துரைத்தார்.
அப்படி ஒரு
கூட்டுறவுக் கழகத்தை தோற்றுவிக்க அவர்கள் பல்வேறு விதமான சிரமத்தை
எதிர்நோக்கியிருக்கிறார்கள். நம் சமுதாய நன்மைக்காக, பிற இனங்களுக்கு மத்தியில்
நாமும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டு தேசிய நிலநிதி
கூட்டுறவு சங்கத்தை உருவாக்கினார்கள். அதேபோல் இந்த கொமிஸ் கூட்டுறவுக் கழகமும்
மக்கள் சேவையாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த அமைப்பின் தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு ஜப்பான் மொழி நன்றாகத் தெரியும். உண்மையில் நம் நாட்டில் ஜப்பான் கம்பெனிகள்தான் அதிகம். அதிலும் ஜப்பான்காரர்கள் இந்தியர்களை அதிகம் விரும்புவார்கள். சீனப் பள்ளிக்கு நம் பிள்ளைகளை அனுப்பி சீனம் தெரிந்துகொள்வதைவிட, ஜப்பான் மொழி நிச்சயம் பயனானதாக இருக்கும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



