பெரிக்காத்தானுடனான அரசியல் ஒத்துழைப்பை பொதுத்தேர்தல் வரை நீட்டிக்கும் திட்டம் இல்லை – ஜாஹிட் ஹமிடி

top-news

கோலாலம்பூர், நவ 16: பெரிக்காத்தான் நேஷனலுடன் பாரிசான் நேஷனல் மேற்கொண்ட அரசியல் ஒத்துழைப்பை அடுத்த பொதுத்தேர்தல் வரை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எதிர்கால அரசியல் சூழ்நிலைகள் அதற்கான தேவையை ஏற்படுத்தினால், பெரிக்காத்தான் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற பாரிசான் நேஷனல் கூட்டணிக் கட்சியான மலேசிய மக்கள் முற்போக்குக் கட்சியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசியபோது ஜாஹிட் இதனைத் தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் ஜே. லோக பால மோகன் மற்றும் மஇகா பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களில் பாரிசான் நேஷனலும் பெரிக்காத்தான் நேஷனலும் இணைந்து செயல்பட்டது அரசியல் புரிந்துணர்வு அடிப்படையிலானது என்று ஜாஹிட் விளக்கமளித்தார்.

இந்த ஒத்துழைப்பை அடுத்த பொதுத்தேர்தல் வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டம் தங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்றும், ஆனால் எதிர்காலத்தில் அரசியல் சூழ்நிலைகள் அதற்கான தேவையை ஏற்படுத்தினால் இரு தரப்பினரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டும் என்று தாம் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்றும் ஜாஹிட் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கான அதிகாரமும் முடிவெடுக்கும் உரிமையும் பிரதமருக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற்ற மலாக்கா  மாநிலத் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ஜாஹிட், பாரிசான் நேஷனலும் பாஸ் கட்சியும் அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்டால் புத்ராஜெயாவை அடைவதற்கான பாதை மேலும் தெளிவாகும் என்று கூறியிருந்தார்.

பாஸ் தலைவர்களும் அடுத்த பொதுத்தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றும் நோக்கில் பாரிசானுடனான அரசியல் புரிந்துணர்வை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜாஹிட்டின் தற்போதைய கருத்து, அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசான் நேஷனலும் பெரிக்காத்தான் நேஷனலும் இணைந்து செயல்படுமா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

இரு கூட்டணிகளுக்கும் இடையிலான எதிர்கால அரசியல் உறவு குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பது ஜாஹிட்டின் பேச்சின் மூலம் தெளிவாகியுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்