அக்டோபர் 27 முதல் வடகிழக்கு பருவமழை! நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில் வெள்ள அபாயம்!
- Shan Siva
- 23 Oct, 2026
கோலாலம்பூர், அக். 23: மலேசியாவில் 2026/2027ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) அறிவித்துள்ளது.
நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் மூன்று முதல் ஐந்து முறை தொடர்ச்சியான கனமழை பெய்யக்கூடும் என்றும், இதனால் தாழ்வான பகுதிகளிலும் ஆற்றங்கரையோரக் குடியிருப்புகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இப்பருவமழைக் காலத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து தொடர்ந்து பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமது ஹிஷாம் முகமது அனிப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனால் குறிப்பாகத் தென்சீனக் கடலில் கடல் அலைகள் சீற்றமடைவதுடன்,
கடல் நீர்மட்டமும் உயரக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, ஜனவரி முதல் மார்ச் வரையிலான பருவமழையின் இறுதிக்கட்டத்தில், குறிப்பாகத் தீபகற்ப மலேசியாவின் வடமாநிலங்களிலும் சபாவிலும் மழைப்பொழிவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நிலவும் மிகவும் வலுவான 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) தாக்கத்தால் அக்காலப்பகுதியில்
வெப்பமான மற்றும் வறண்ட வானிலை நிலவுவதுடன், கடுமையான வெப்ப அலைகளும் ஏற்படக்கூடும் என்று ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் பருவமழைக் காலம் முழுவதும் விழிப்புடன் இருக்குமாறும், வானிலை முன்னறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

