லஞ்சத்தையும் மதவெறியையும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பீர்!

top-news
FREE WEBSITE AD

லண்டன், ஜன. 19 -

தீவிர மதவெறி, இனவெறி மற்றும் லஞ்ச ஊழலை முற்றாக நிராகரிக்குமாறு, நாட்டின் இளம் தலைமுறையினரிடம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீர்க்கமான கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

மலேசியா ஒரு பல்லின மக்கள் கொண்ட மற்றும் அமைதியான நாடாக இருக்கும் வேளையில், இனம் மற்றும் தீவிர மதவெறி நடவடிக்கைகள் மூலம் நாட்டைப் பிரித்தாள முயற்சிக்கும் தரப்பினரும் இருக்கின்றனர் என்று, இக்கோரிக்கையை விடுக்கும்போது அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை லண்டன் பொருளாதாரப் பள்ளியில் விரிவுரை ஆற்றும்போது அன்வாரிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டன.
அவற்றுக்கு பதிலளித்த பிரதமர், நாட்டை ஆட்சி புரியும் கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, லஞ்ச ஊழல் மற்றும் “நாட்டின் சொத்துகளைச் சுரண்டும் தலைவர்கள்” போன்றவர்களிடம் சமரசம் காண தமது அரசாங்கத்தின் மடானி கொள்கை அனுமதிக்காது என்று பதிலளித்தார்.

அரசியலமைப்புச் சட்டம் முஸ்லிம்கள், மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வேளையில், இதர சமூகத்தினரிடையே வெறுப்புணர்வைத் தூண்டி விடவும் அவமதிக்கவும் இன அடிப்படையிலான கொள்கைகளை சில தரப்பினர் பின்பற்றி வருவதை அன்வார் சுட்டிக் காட்டினார். "இத்தகைய செயல்களுக்கு எதிராக நான்
கடுமையாக இருப்பேன். எனது கொள்கைகளுக்காக அவர்கள் என்னை விமர்சிக்கலாம். ஆனால், அவர்கள் இன மற்றும் சமயங்களைப் பயன்படுத்த முடியாது" என்று அன்வார் குறிப்பிட்டார்.

மலேசியா கடந்த காலத்தில் கணிசமான வளர்ச்சி திறனை கொண்டிருந்தது. ஆனால், மோசமான நிர்வாகமும் பேராசையும் அதன் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததாக, இங்கிலாந்துக்கு ஐந்து நாள் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் அன்வார் தெரிவித்தார்.

"இதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். லஞ்ச ஊழல் மற்றும் மதவெறி வேண்டாம் என்று தைரியமாகச் சொல்லுங்கள் என்று அவர்களை கேட்டுக் கொண்ட அன்வார், மலேசியா போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகிப்புத்தன்மை அவசியம் என்றார்.
அன்வார் நடத்திய விரிவுரையில், லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயிலும் மலேசிய மாணவர்கள் உட்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *