பகுதி 8 (ஆரண்ய காண்டம்)

top-news
FREE WEBSITE AD

மற்றுமொரு சூர்ப்பனகை

எங்குத் தேடினும் நீர் கிடைக்கவில்லை. சிங்கம்போல் காட்டில் அவன் திரிந்து கொண்டிருந்தான். அங்கு அவ்வனத்தில் இரும்பு போன்ற முகத்தை உடைய அயோமுகி என்னும் அரக்கி இவனைக் கண்டாள்; கண்டதும் இவன் மீது விருப்பம் கொண்டாள். இவன் “மன்மதனாக இருக்கிறான்” என்று நினைத்தாள்; தன் செருக்கையும் கொடுமையையும் தணித்துக் கொண்டாள்.

“இவனை அணைத்துக் கொள்வேன்; மறுத்தால் அடித்துக் கொல்வேன்” என்று முடிவுக்கு வந்தாள்.

அவன் தன்னை ஏற்க மறுத்தால் அவனைத் துக்கிச் செல்வது என்ற முடிவுக்கு வந்தாள். இலக்குவனைச் சந்தித்தாள், நெருங்கி அணைந்தாள்.

“இருட்டில் முரட்டுத் தனமாக மருட்டும் நீ யார்?” என்று கேட்டான்.

“நான் உன்னைத் தழுவ விருப்பம் கொண்டேன்; உன்னை அடையாவிட்டால் நான் உயிர்விடுவது உறுதி” என்றாள். ​

இவளும் ஒரு சூர்ப்பனகை என்பதை அறிந்தான். “நின்றால் உன் மூக்கும் செவியும் அறுபடும்” என்று அதட்டிப் பேசினான்.

அவள் அஞ்சவில்லை; கோபமும் கொள்ள வில்லை. இலக்குவனை வாரி எடுத்துக் கொண்டு வான்வழியே சென்றாள். தன் குகையில் அவனை வைத்து அவன் சினம் தணிந்ததும் அவனைத் தழுவி இன்பம் அடையலாள் என்று நினைத்தாள். இலக்குவன் சீற்றம் மிகக் கொண்டான். அவளிடமிருந்து விடுபடுவது எப்படி என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

இலக்குவனைப் பிரிந்த இராமனின் துயர் இரு மடங்காயிற்று. சீதையைப் பிரிந்த துயர் ஒருபுறம், இக்குவனை இப்பொழுது பிரிந்த துயர் மற்றொரு புறம். நீரைக் கொண்டு வரச் சென்றவனை யாரோ ஆபத்தில் சிக்க வைத்து இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

“சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன் இவனையும் கடத்திச் சென்று விட்டானோ, அன்றிக் கொன்று தீர்ந்தானோ, சீதையைக் காவல் செய்வதில் நெகிழ்ச்சி பெற்றமைக்கு வருந்தித் தானே உயிர் துறந்தானோ” என்று பலவாறு நினைத்தான்.

கண்ணை இழந்தவன்போல் கதறி அழுதான் “உயிர் போன்று இருந்தாய். என்னைத் தவிக்கவிட்டுச் சென்றது பொருத்தமா?” என்று பிரலாபித்தான். “அரசு துறந்த போதும் தனி ஒருவனாக நீ என்னைப் பின் தொடர்ந்தாய்; என் துக்கத்தில் பங்கு கொண்டு என்னோடு வந்தாய். அத்தகைய நீ என்னை விட்டுப்பிரிந்து போதல் தகுமா?” என்று கூறி வருந்தினான். ​

“அறத்தின் செயல் இதுவாக இருக்குமானால் அடுத்த பிறவியில் உனக்கு நான் தம்பியாகப் பிறப்பது என் கடமை ஆயிற்று” என்று கூறித் தன் உயிரைப் போக்கிக் கொள்ள முடிவு செய்தான்.

அரக்கி அயோமுகியின் மாயையில் அகப் பட்டிருந்த இலக்குவன் அம்மாயையின்று விடுபட்டுத் தெளிவு பெற்றான். அவள் மூக்கை அறுத்து அங்கக் குறைவினை ஏற்படுத்தினான். அவள் இட்ட கூக்குரல் அக்காடு முழுவதும் எதிரொலித்தது. அது இராமன் செவிக்கும் எட்டியது. இது ஒர் அரக்கியின் குரலாகத்தான் இருக்க முடியும்” என்று இராமன் ஓரளவு அநுமானித்தான்.

அங்கையில் அக்கினி அத்திரம் எடுத்துக் கொண்டு ஒலி வரும் திக்கு நோக்கிப் புறப்பட்டான்.

புயற் காற்றைவிட வேகமாய் இலக்குவன் இருக்குமிடத்தை அடைந்தான். இலக்குவன் இராமனைப் பார்த்து “வள்ளலே! வருந்தற்க” என்று கூறினான். இழந்த கண்ணொளியை மீண்டும் பெற்றது போல் இராமன் மகிழ்ச்சி அடைந்தான். பிரிந்த கன்றை அடைந்த பசுவாய் விளங்கினான்.

“சென்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவை?” என்று கேட்டான் இராமன்.

“அயோமுகி என்னும் அரக்கியின் மூக்கையும், செவியையும், உதடுகளையும் அறுத்து முடித்தேன்; அவள் கூக்குரல் இட்டாள்; தப்ப விட்டேன்” என்றான். ​

“உயிரைப் போக்காமல் விட்டது உத்தமம், அதுதான் அறநெறி” என்று அறிவித்தான்.

துன்பம் நீங்கி அமைதி பெற்று வருணனை நினைத்து மந்திரம் கூறினான் இராமன். அவன் மழை நீரைத் தர அதனைக் குடித்து இருவரும் நீர் வேட்கை தணித்தனர். அந்த மலையில் மணல் பரப்பில் இலக்குவன் அமைத்துக் கொடுத்த மரப் படுக்கையில் இராமன் படுத்துக் கொண்டான்; உணவும், உறக்கமும் இன்றி வேதனைப் பட்டான், சீதையின் நினைவு அவனை வாட்டித் துயில் இழக்கச் செய்தது.

லட்சுமி சுப்பிரமணியம்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *