ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு திறந்த வெளி மண்டபம்! - ஓம்ஸ் பா.தியாகராஜன் வாக்குறுதி

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஜூன் 21: கிள்ளான், தேசிய வகை ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில், விடியலை நோக்கி எனும் கலந்துரையாடல் நிகழ்வு அப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்கு திறந்த வெளி மண்டபம் அமைக்கக் கோரி நடைபெற்ற இந்நிகழ்வில், ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன், கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் பன்னீர் செல்வம் கோபால், சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன், ஓம்ஸ் அறவாரியத்தின் பொருளாளர் ஏ.ஜி.திலகன் மற்றும்  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி வாரிய உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள்  பங்கேற்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியை திருமதி கோகிலவேணி அனைவரையும் வரவேற்றார். இறைவாழ்த்தோடு தொடங்கிய நிகழ்வில், தங்கள் பள்ளியின் முக்கியத் தேவையாகக் கருதப்படும் பள்ளி மண்டபம் தங்களுக்கு அமைத்துத் தரப்பட வேண்டும் எனும் கோரிக்கையை பள்ளி மாணவர்களே மேடையில் தோன்றி ஒவ்வொருவராக முன் வைத்தது வித்தியாசமாய் இருந்தது.

நிகழ்வில் பேசிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சிவகாந்தன் 1300 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது. ஆனால், முறையான திறந்த வெளி மண்டபம் இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது. எனவே, இந்தப் பள்ளிக்கு ஒரு மண்டபத்தை அமைத்துத் தருமாறு ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களைத் தாம் கேட்டுக்கொள்வதாக பள்ளியின் சார்பில் வேண்டுகோளை முன்வைத்தார். 

..நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன் பள்ளி மண்டபம் எவ்வளவு முக்கியம் என்பதை தாம் அறிவேன் என்றும், தமிழ்ப்பள்ளிகள் மட்டுமல்லாது இடைநிலைப்பள்ளிகளிலும் தாம் மண்டபங்களை அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், இந்தப் பள்ளியின் வேண்டுகோளுக்கு இணங்க இப்பள்ளிக்காக திறந்த வெளி மண்டபத்தை அமைத்துக் கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாகவும்,   அதற்குரிய முறையான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதோடு, அரசு அனுமதி மற்றும் உரிய நடைமுறைகளையும் பள்ளி வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
மேலும் பள்ளி மண்டபம் அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்ட ஓம்ஸ் பா.தியாகராஜன், விவரங்களைக் கேட்டறிந்ததோடு தக்க ஆலோசனைகளையும் வழங்கினார்.
 
இதுவரை 18 மண்டபங்களை பள்ளிகளுக்காக ஓம்ஸ் பா.தியாகராஜன் கட்டிக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *