தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்குப் பொது இயக்கங்களின் பங்கு - முனைவர் செல்வஜோதி இராமலிங்கம்
- Tamil Malar (Reporter)
- 14 Dec, 2025
பொதுவாக ஒரு நாட்டில் சிறுபான்மை மக்களாக வாழ்பவர்கள் தங்கள் தாய்மொழியையும் தாய்மொழிக்கல்வியையும் நிலைநிறுத்துவதற்குப் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றனர். மக்கள் தொகையில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருப்பதனால் பெரும்பாலும் பல நிலைகளில் தங்கள் தாய்மொழியையும் தாய்மொழிக்கல்வியையும் வளப்படுத்துவதற்கான உதவிகளையும் வாய்ப்புகளையும் பெறுவதற்கான சூழல் அமைவது சற்றுச் சவால் நிறைந்த ஒன்றாகவே கருதப்படுகின்றது. Giles, Bourhis & Taylor (1977) ஆகியோரின் மொழி நிலைத்தன்மை கோட்பாட்டு விதிகளுக்கு ஏற்ப தாய்மொழிக் கல்வி நிலைத்தன்மைக்கு மூன்று காரணிகளை முன்மொழிகின்றனர். அவையாவன மொழியின் மதிப்பு, மக்கள் தொகை மற்றும் நிறுவனங்களின் ஆதரவு ஆகும். நம் நாட்டுச் சூழலில் மக்கள் தொகையும் மொழியின் தரமும் தமிழ்மொழிக் கல்வி தற்காத்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவியலாதவையாகும். ஆனால் நிறுவன ஆதரவு அடிப்படையில் நமது நாட்டில் தமிழ்க் கல்வியைத் தற்காப்பதில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவதாக அமைகிறது.
நிறுவன ஆதரவு என்று பார்க்கையில், பொதுவாக அரசு ஆதரவு என்றுமே ஆளுமையுடையதாகவே அமைகிறது. காரணம் ஒரு நாட்டின் அரசு கொள்கைகளும் அதன் திட்ட அமலாக்கமும் அந்நாட்டில் தாய்மொழிக் கல்வி மேலோங்கவோ மாறாக வீழ்ச்சியடைவதற்கோ மிகப்பெரிய பங்காற்றுகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. அந்நாட்டில் தமிழ்க்கல்வி நிலைத்தன்மைக்கு உந்துதலாக அமைகிறது. ஆனால் நம் நாட்டுச் சூழலில் தமிழ்மொழிக்கு அரசியல்நிலை மதிப்புக் குறைவுன; பொருளாதார மதிப்புக் குறைவு ஆனால் ஊடகத்துறை, கல்வித்துறையைப் பொருத்தமட்டில் அதிகாரத்துவ மொழி என்ற மதிப்புப் பெற்றுள்ளது. அதாவது 525 தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழி பயிற்றுமொழியாகவும் வானொலியில் தமிழ்ப்பிரிவு 24 மணிநேரம் செயல்பட்டு வருவதும், தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் 24 மணிநேரம் ஒளிபரப்பபடுவதும், 4 நாளிதழ்கள் வெளிவருவதும் தமிழ்மொழி தற்காத்தலுக்கு உந்துதலாக அமைகிறது. இவ்வாறன சூழல்கள்தான் நிறுவன ஆதரவின் ஒரு பகுதியாக அமைகிறது. ஆக, சிறுபான்மை மக்கள் வாழும் நாடுகளில் தாய்மொழி நிலைத்தன்மைக்கு நிறுவன ஆதரவு முக்கியமாக அமைகிறது. இதன் அடிப்படையில் நம் நாட்டில் அரசாங்க ஆதரவுக்கு அப்பாற்பட்டுத் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்குச் சமூக இயக்கங்கள் பள்ளி நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்த்து வருகிறது. சமூக அமைப்புகள் என்றும் பார்க்கும்போது அரசு சார்பற்ற இயக்கம் (Non Govermental Organization - NGO) என்று பொருள்படும். இவ்வாறான சமூக இயக்கங்கள் தமிழ்ப்பள்ளிகள் மீதான ஈடுபாடு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு அரசாங்கம் மலேசியப் பள்ளிகளின் மேம்பாட்டிற்குப் பெற்றோர்களும் சமூகமும் பங்களிக்க வேண்டும் என்பதைக் கல்வி அமைச்சின் ஒரு திட்டமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது (Penglibatan Ibubapa dan Komuniti – PIBK) [PPPM 2013 – 2025]. இவ்வாறான திட்டங்கள் தொடர்பாக மேலை நாட்டு அறிஞர்கள் பலரும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னரே கருத்துரைத்திருக்கின்றனர்.
“ A school is a reflection of the community it serves. At the same time, a community is a reflection of its schools” - Poston, Stone & Muther (1992)
மேற்காணும் கூற்றின் வெளிப்பாடு என்னவென்றால் பள்ளியையும் பள்ளிச் சார்ந்த சமூகத்தையும் பிரித்துப் பார்க்க இயலாது. காரணம் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவையாக அமைகிறது. இந்நிலையை அறிந்த கல்வி அமைச்சு, பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் தரத்தை மேம்படுத்த சமூகம் முக்கியப் பங்காற்ற முடியும் என்பதனை உணர்ந்து
1982 ஆம் ஆண்டு இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும்
Akta Pendidikan 1996 – என்ற கல்விச் சட்டத்தின்வழி
பெற்றோர் ஆசிரியர் சங்கம் தோற்றுவிக்கப்படுவதும் அதன் நடவடிக்கைகள் பள்ளி மேம்பாட்டிற்கு உதவ இயலும் என்பதனையும் தெளிவாக எடுத்துணர்த்துகின்றது. இது அரசு அங்கீகாரம் பெற்ற ஒன்றாகவும் திகழ்கிறது.
Hoover-Dampsey & Sandler (1995, 1997) ஆகியோர் பள்ளிகளின் மேம்பாட்டிற்குச் சமூகத்தின் பங்கு தொடர்பாக மாதிரி (model) ஒன்றை வழங்கினர். உளவியல் அடிப்படையில் இந்த மாதிரியை மையமாகக் கொண்டு இது எவ்வாறு சமூக இயக்கங்களோடு தொடர்புபடுத்த இயலும் என்பதைத் தொடர்ந்து காண்போம். தமிழ்ப்பள்ளிகளில் செயல்படும் பொது இயக்கங்கள் சிறப்பாகச் செயல்படுவதற்குச் சில காரணிகளை முன்வைக்கலாம். அவை:
அ) தங்களின் ஈடுபாடு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திடும் என்ற
நம்பிக்கை எந்தளவு உள்ளது?
ஆ) தங்களிடம் உள்ள அறிவாற்றலும் திறனும் எவ்வாறு பள்ளிக்கும்
மாணவர்களுக்கும் உதவ இயலும்?
இ) பள்ளி நிர்வாகம் எந்தளவு தங்களுக்கு வரவேற்பு அளிக்கிறது?
இவை அனைத்திற்கும் முக்கியக் காரணம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த மாணவர்களாக உருவாக வேண்டும் என்பதாகும். அதற்கு ஏற்ற கற்றல் சூழல் உருவாகும் மையங்களாகத் தமிழ்ப்பள்ளிகள் அமைகின்றன. ஆக, தமிழ்ப்பள்ளிகள் தொடர்புடைய அனைத்துத் தரப்பினர்களுடனும் இணைந்து இந்த நோக்கத்தை அடைவதன் வாயிலாக தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டில் தொடர்ந்து பீடுநடை போட முடியும். இதன் வாயிலாக இந்நாட்டில் சிறுபான்மை மக்களாக வாழும் நாம், நமது மொழியுரிமையையும் அதைத் தொடர்ந்து நமது பண்பாட்டு விழுமியங்களையும் தற்காக்க இயலும். 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலுக்குத் துணைநிற்கும் வகையில் பல பொது இயக்கங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இத்தகைய பண்புகள் இருப்பதையும் உறுதி செய்து வருகிறது.
முதலாவதாக, பள்ளி மேலாளர் வாரியம் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்குப் பங்காற்றக்கூடிய அமைப்புகளில் மிக முக்கியமான ஒன்றாகும். பொதுவாக ஒரு பள்ளியின் வளர்ச்சி என்பது மாணவரின் வளர்ச்சியையே அதாவது மாணவராக்கலையே (kemenjadian murid) மையமாகக் கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு முறையான கல்வியைக் கொடுப்பதன் வாயிலாக உடல், உள்ளம், ஆன்மீகம், அறிவாற்றல், சமூகவியல் ஆகியவற்றில் சமன்நிலை வளர்ச்சியைப் பெற்று உள்நாட்டு; வெளிநாட்டு மக்களுடன் சமூகநீதியோடு போட்டியிடும் சூழலை உருவாக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆரம்பக் கல்வி முறையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். முறையாக வழங்கப்பட்டிருப்பது என்பது தரமான கல்வியையே சாரும். யுனேஸ்கோவின் நிலைத்தன்மைக்கான இலக்குகள் 17இல் தரமான கல்வியும் ஒன்று என்பதைக் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். குறிப்பாக தாய்மொழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்குவதில் எந்தவொரு சிக்கலும் இருக்கக் கூடாது. அவ்வாறான தரமான கல்வியை வழங்குவதற்கு அடிப்படையில் பலரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அதாவது பள்ளியின் (மாணவரின்) வளர்ச்சி என்பது பள்ளி நிருவாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், பொது இயக்கங்கள் ஆகிய நிறுவன ஆதரவு மிக முக்கியம். இந்த ஐந்து கூறுகளில் பள்ளி மேலாளர் வாரியமே அனைத்தையும் உள்ளடக்கி (குறைந்த பட்சம் நான்கு கூறுகளை) செயலாற்றும் அமைப்பாக உள்ளது. காரணம் பள்ளி மேலாளர் வாரியத்தின் அமைப்பில் பள்ளி நிருவாகத்தின் நிகராளி (செயலர் – தலைமையாசிரியர்), பெற்றோர் நிகராளிகள், முந்நாள் மாணவர் சங்க நிகராளிகள் என மூன்று அமைப்பைச் சார்ந்த நிகராளிகள் பள்ளி வாரியத்தோடு இணைகின்றனர். ஆக ஒட்டு மொத்த பள்ளியின் மேம்பாடு என்பது பள்ளி மேலாளர் வாரியத்தைப் பெரிதும் சார்ந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
1. பள்ளி மேலாளர் வாரியம்
2. பள்ளி நிருவாகம்
3.பெற்றோர் ஆசிரியர் சங்கம்
4. முன்னாள் மாணவர் சங்கம்
5. பொது இயக்கம்
கல்வி சட்டம் 1996 (நாடாளுமன்ற சட்ட எண் 550) பாகம் 4, அத்தியாயம் 11, சட்ட விதி 53இன் கீழ் ஒவ்வொரு தேசிய வகை பள்ளியும் சட்டத்திற்கு முரண்படாத முறையில் நிருவகிப்பதற்கு வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும். தொடக்கத்தில் அதாவது 2009ஆம் ஆண்டுக்கு முன் தமிழ்ப் பள்ளிகளில் சுமார் 15 வாரியங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழ் அறவாரியத்தின் முயற்சியில் 2016ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 480 தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி மேலாளர் வாரியங்கள் அமைக்கப்பட்டு இன்றும் சீரிய முறையில் செயலாற்றி வருகின்றன.
பள்ளி மேலாளர் வாரியத்தின் பங்கு
பள்ளி வளர்ச்சிக்கான நிதி
பெரும்பாலும் பகுதி உதவி பெறும் பள்ளிகளின் சீரமைப்புப் பணிகளுக்குப் பெரிய அளவில் நிதி தேவைப்படும். இந்த நிதியைத் திரட்டுவதற்கான திட்டங்களைத் தீட்டி பள்ளி மேலாளர் வாரியத்தின் சார்பில் நிதியைத் திரட்டி பள்ளி மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நில பாதுகாப்பு
பள்ளியின் நிலத்தைப் பாதுகாப்பதற்குப் பள்ளி மேலாளர் வாரியங்கள் மிகவும் முக்கியம். தமிழ்ப் பள்ளிகள் பல சொந்த நிலத்தைக் கொண்டிருக்கவில்லை. அவை நடுவண் அரசு நிலங்கள், மாநில அரசு, தோட்ட உரிமையாளர்கள், தனியார் நிலங்கள், ஆலயங்கள், இயக்கங்கள் இன்னும் பிற என்ற நிலையில் அமைந்துள்ளன. சில பள்ளிகளுக்கு நில பட்டா ஒதுக்கப்பட்டிருந்தாலும் இந்த நிலபட்டாக்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருக்காது. இந்நிலையில் அவ்வாறான பள்ளிகளுக்குரிய நிலங்களைப் பிறர் கையகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அப்படியே பிறரிடம் இழந்து விட்டாலும் இழப்பீட்டுத் தொகையைக் கூட பெற இயலாமல் போய்விடுகிறது. சில வேளைகளில் பள்ளிக்கு நிலத்தைப் பெறுவதற்கு பள்ளி வாரியத்தின் கீழ் அறங்காவலர் வாரியம் அமைத்து நிலப்பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பள்ளியின் நிலப்பிரச்சனையைத் தீர்க்க இயலும். அதற்குப் பள்ளி மேலாளர் வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், பள்ளி தனது சொந்த நிலத்தில்தான் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்வதற்குப் பள்ளி மேலாளர் வாரியம் முக்கியப்
பங்காற்றலாம். அப்படிச் சொந்த நிலத்தில் இல்லையென்றால் நிலப்பட்டாவுக்கு
விண்ணப்பம் செய்யும் நடவடிக்கையை பள்ளி மேலாளர் வாரியம் மேற்கொள்ளலாம். மாணவர்
எண்ணிக்கை உயரும்போது பள்ளியின் உள்கட்டமைப்பைச் சீர்செய்வதற்கும்
இணைக்கட்டடங்களைக் கட்டுவதற்கும் பள்ளி மேலாளர் வாரியம் முயற்சி செய்தால் நடவடிக்கையை
விரைவு படுத்தலாம். அதுவே மாணவர் எண்ணிக்கை குறையும்போது பள்ளி இடமாற்றத்திற்கு
விரைந்து செயல்படலாம்.
பள்ளி இடமாற்றம் என்பது இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று, ஓர் இடத்திலிருந்து தூரத்திலிள்ள வேறொரு இடத்திற்கு மாற்றுவது. மற்றொன்று, தற்போது அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே வேறொரு நிலத்தை அடையாளங்கண்டு விட்டு இட மாற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். குறிப்பாக இந்த இடமாற்றம் என்பது ஒரு மாவட்டத்தை விட்டு வேறொரு மாவட்டத்திர்குச் செல்கிறதா? அல்லது ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்குச் செல்கிறதா? என்பதை அடையாளங்கண்டு பரிதுரை வழங்க வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட விருக்கும் நிலமும் நிலத்தைச் சுற்றிய பகுதிகளில் அதிகமான இந்தியர்கள் வாழ்கிறார்களா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
நிலப்பிரச்சனை/ இட மாற்றம்
இன்று பெரும்பாலும் தமிழ்ப்பள்ளிகளில் நிலப்பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. குறிப்பாக, குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளின் இடமாற்றம் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குப் பள்ளி மேலாளர் வாரியத்தின் பங்கு மிகவும் முக்கியம். பொதுவாக பள்ளியின் இடமாற்றம் குறித்து பள்ளியின் தலைமையாசிரியரோ பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரோ சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளரிடம் பேசியிருக்கலாம். இது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளி மாற்றலாகிச் சென்று இருக்கலாம். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும்கூட மாறிதிருக்கலாம். ஆனால் பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் என்று பார்ர்கும் போது அவர்களின் பதவி நீண்ட காலமாகும். இந்தத் தருணத்தில் பள்ளி மேலாளர் வாரியம் அப்போதைய தலைமையாசிரியர்; பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோரோடு இணைந்து நிலப்பிரச்சனைக்கு விரைவில்தீர்வு காண முயற்சிக்கலாம்.
அரசு நிதி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள்
பள்ளிகளின் கட்டட மேம்பாடுகளுக்கான நிதியை அரசாங்கம் நேரடியாக வழங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருந்தன. இந்நிலையில் பள்ளிகளில் பள்ளி மேலாளர் வாரியங்கள் இல்லையென்றால் இவ்வாறான நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். முறையாகச் செயல்பட்டு வரும் பள்ளி மேலாளர் வாரியங்கள் முறையான வங்கிக் கணக்குகள் கொண்ட பள்ளி மேலாளர் வாரியங்கள் இவ்வாறான அரசு நிதியைப் பெறுவதில் சிக்கல் இருக்காது.
பாலர்
பள்ளி
இன்று நம் நாட்டில் இயங்கும் 527 தமிழ்ப்பள்ளிகளில் 30% தமிழ்ப்பள்ளிகளில்தான் பாலர் பள்ளிகள் செயல்படுகின்றன. இவ்வாறான பாலர் பள்ளிகள் அரசாங்கத்தாலும் பொது இயக்கங்களாலும் தனியார் நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளின் அவசியத்தை உணர்ந்து பள்ளி மேலாளர் வாரியங்கள் பாலர் பள்ளி தொடங்குவதற்கான உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். இது பள்ளி மேலாளர் வாரியத்தின் முகாமையான நடவடிக்கையாக இருந்தால் சிறப்பு. காரணம் பாலர் பள்ளி உள்ள பள்ளிகளில் பொதுவாக மாணவர் எண்ணிக்கையில் சிக்கல் இருக்காது. ஆக பாலர் பள்ளி அமைக்கும் முயற்சியில் பள்ளி மேலாளர் வாரியங்கள் செயல்பட்டால் குறந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளின் சிக்கலுக்கும் தீர்வு காண இயலும்.
பள்ளி மேலாளர் வாரியம் Vs பெற்றோர் ஆசிரியர் சங்கம்
தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியில் நேரடியாக தொடர்பில் உள்ள அமைப்புகள் பள்ளி
மேலாளர் வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும். இந்த இரண்டு அமைப்புகளும் பள்ளி
நிருவாகத்தோடு ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயல்பட்டால் பள்ளியின் மேம்பாடு சிறப்பாக
அமைந்திருக்கும். நடைமுறைச் சிக்கல் என்னெவெனில் சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர்
சங்கமும் ஒன்றிணைந்து செயல்படுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. இதற்கு முக்கியக்
காரணம் அவ்விரண்டு அமைப்புகளும் அவற்றின் நடவடிக்கைகளுக்கான வரையறையை வரையறுத்துக்
கொண்டு செயல்படுவதில் குழப்பமும் தெளிவின்மையும் ஏற்படுகின்றது. அதாவது
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் எந்தத் தரப்பினரும் முன்வந்து உதவலாம்.
அதற்கு வரையறை தேவையில்லை ஆனால் பள்ளியோடு தொடர்புடைய அமைப்புகள் ஒன்றிணைந்து
பங்களிக்கும்போது ஒருசில வரையறைகளை வரையறுத்துக் கொண்டால் சிறப்பு. அடிப்படையில்
பள்ளி மேலாளர் வாரியங்களின் வரையறை என்ன என்பது குறித்து தெளிவாக வரையறுத்துக்
கூறப்பட்டுள்ளது. அதாவது பள்ளியின் கட்டடம், உள்கட்டமைப்பு, நில விவகாரம், தளவாடப் பொருட்கள், பள்ளியின் சீரமைப்புப் பணி
குறித்து பள்ளி மேலாளர் வாரியங்கள் செயலாற்ற வேண்டும். மாணவர் நலன், கல்வி மேம்பாடு குறித்த
நடவடிக்கைகளுக்குப் பள்ளி மேலாளர் வாரியம் ஏற்று நடத்தலாம் அல்லது பெற்றோர் ஆசியர்
சங்கம் ஏற்று நடத்தலாம் அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கோ பள்ளி
நிருவாகத்திற்கோ நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி உதவி அளிக்கலாம். ஆனால் பெற்றோர்
ஆசிரியர் சங்கம் பள்ளியின் கட்டடம், உள்கட்டமைப்பு, நில விவகாரம், தளவாடப் பொருட்கள், பள்ளியின் சீரமைப்புப் பணி
குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். கீழ்க்காணும் அட்டவணையில்
பள்ளி மேலாளர் வாரியம் சார்ந்த நடவடிக்கைகளும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்ந்த
நடவ்டிக்கைகளுக்கான பரிரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன:
பள்ளி மேலாளர் வாரியம் Vs பெற்றோர் ஆசிரியர் சங்கம்
|
பள்ளி மேலாளர் வாரியம் |
பெற்றோர் ஆசிரியர் சங்கம் |
|
நிலமும் நிலம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் |
மாணவர் வருகை |
|
பள்ளியின் உள் கட்டமைப்பு |
மாணவர்களின் சுகாதாரம் |
|
மாணவர்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கைகள் |
மாணவர்களின் புத்தகப்பை சுமை |
|
பள்ளித் திடலை சீரமைப்புச் செய்தல் |
பிரத்தியேக வகுப்புகள்/ வழிகாட்டி வகுப்புகள் |
|
பள்ளியின் வெள்ளப் பிரச்சனை |
பெற்றோர் விழிப்புணர்வு பயிற்சி |
|
மேசை நாற்காலி போன்ற தளவாடப் பொருட்கள் |
போட்டி விளையாட்டு/ விளையாட்டுப்
போட்டிகளுக்கான செலவை ஏற்பது |
|
பள்ளியின் கழிப்பறை, சிற்றுண்டிச் சாலை |
ஆசிரியர் – பெற்றோர் உறவு |
|
பாலர் பள்ளி சுயமாக அமைத்தல் |
சமய வகுப்பு |
|
பள்ளியில் கணினி வகுப்பு உருவாக்குதல் |
மாணவர்கள் போட்டி விளையாட்டுகளுக்குச் செல்ல
போக்குவரத்து வசதி |
|
பள்ளியை அழகுபடுத்துதல் |
சில மாநில அரசாங்க மானியங்களுக்கு மனு செய்தல் |
|
அரசாங்க மானியங்களுக்கு மனு செய்தல் |
|
|
கூடுதல்/ இணை கட்டடம் |
|
|
மாணவர்களின் போக்குவரத்து வசதி |
|
மேலே அட்டவணையில் வழங்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் எடுத்துக்காட்டுகள் வாயிலாக பள்ளி மேலாளர் வாரியங்களை அமைப்பதனால் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்குப் பாதகம் ஏற்படும் என்ற தவறான எண்ணத்தை தமிழ்ப் பள்ளியின் பங்குதாரர்களிடயே ஏற்படுத்த முடியும். இந்த இரண்டு அமைப்பின் நோக்கமும் செயல்படுகளும் வெவேறாக இருப்பதனால் இவ்விரண்டு அமைப்புகளும் போட்டிப்போட்டுக் கொண்டு செயலாற்ற அவசியமில்லை. மாணவர் நலனை மட்டுமே மனத்தில் கொண்டு ஒன்றிணைந்து செயலாற்றினால் பள்ளியின் வளர்ச்சிக்குப் பலம் சேர்க்கும்.
இந்த இரண்டு இயக்கங்கள் மட்டுமல்லாது, பள்ளியோடு தொடர்புடைய முன்னாள் மாணவர் சங்கமும் பொது இயக்கங்களும் கூட பள்ளி வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது பள்ளி மேலாளர் வாரியங்களின் நடவடிக்கைகளோடு தொடர்புடையதாக இருக்கலாம். ஆக அவர்களையும் கருத்திற் கொண்டு பள்ளியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு பள்ளியின் தலைமையாசிரியர் கல்வி ஆண்டு தொடக்கத்தில் பள்ளியோடு தொடர்புடைய பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முந்நாள் மாணவர் சங்கம், வட்டார/தேசிய நிலை பொது இயக்கங்கள் ஆகியவற்றோடு கூட்டத்தை வைத்துக் கொண்டு ஆண்டுத் திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஓர் ஆண்டில் நான்கு முறை இவர்களோடு கூட்டம் நடத்தி தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கலாம் தொடர் நடவடிக்கை குறித்தும் திட்டமிடலாம். அவ்வாறு செய்யும் போது பள்ளி நிருவாகம் அனைத்துத் தரப்பினரிடையே சுமூகமான உறவை வளர்த்துக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்புண்டு. பள்ளி நிருவாகத்தினருக்கும் அவர்களின் இலக்குத் தெளிவாக இருக்கும்.Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



