பண்டார் சன்வேயில் மாணவி மரணம்; தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இருக்கலாம் என போலீஸ் தகவல்
- Surendran Sumdraraj
- 24 Jun, 2026
ஷா ஆலம், ஜூன் 24 –
பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வேயில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட தனியார் உயர்கல்வி நிறுவன மாணவி மரணம் தொடர்பில் போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷஸெலி கஹார் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் தனிப்பட்ட உறவு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அன்றாட செலவுகள் தொடர்பான விவகாரங்கள் இந்த சம்பவத்திற்கான ஆரம்பக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் வெளிநாட்டு பெண் மாணவி என்றும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது. இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் மட்டுமல்லாமல், நெருங்கிய உறவில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
“தற்போதைய விசாரணையின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நபரே முக்கிய சந்தேக நபர் என நாங்கள் நம்புகிறோம். மற்றவர்கள் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு. ஆனால் விசாரணை முழுமையாக முடியும் வரை எந்த வாய்ப்பையும் முழுமையாக மூட முடியாது,” என்று அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் சாட்சியங்கள், சிசிடிவி பதிவுகள் மற்றும் தடயவியல் அறிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கின் உண்மை நிலையை கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



