மலையாளிகளின் விசு புத்தாண்டு மற்றும் சீக்கியர்களின் வைசாகி புத்தாண்டு

top-news
FREE WEBSITE AD

விஷு (Vishu) என்பது கேரளாவில் மலையாள மாதமான 'மேடம்' முதல் நாள் (ஏப்ரல் 14/15) கொண்டாடப்படும் பாரம்பரிய புத்தாண்டு மற்றும் அறுவடைத் திருவிழா ஆகும். சூரியன் மேஷ ராசியில் நுழையும் இந்த நன்னாளில், கனி காணுதல், விஷுக்கனி, சத்யா மற்றும் புத்தாடை அணிந்து புதிய ஆண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்

. சித்திரை முதல் நாளில் செய்ய வேண்டிய மிக முக்கியமான சடங்கு கனி காணுதல் மற்றும் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுவது. இது அறியவில் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டதாக கருதப்படுகிறது. இதில் கனி காணுதலுக்கு பல காரணங்களும், பல பலன்களும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கனி காணும் சடங்கு உண்டானதற்கு என்ன காரணம், இது எப்படி வந்தது என்ற காரணம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இதை கேரள மக்கள் சித்திரை விஷூ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். சூரிய பகவான், 12 நாளிலும் தனது பயணத்தை நிறைவு செய்து விட்டு, மீண்டும் புதிதாக மேஷம் ராசியில் இருந்து தனது பயணத்தை புதிதாக துவங்கும் நாள் என்பதால் சித்திரை முதல் நாள், சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு ஆன சித்திரை முதல் நாளில் செய்ய வேண்டிய முதல் சடங்காக சொல்லப்படுவது கனி காணுதல். தமிழ்நாடு, கேரளாவில் இந்துக்களால் கடைபிடிக்கப்படும் மிக முக்கியமான சடங்காக இது கருதப்படுகிறது. இதை சித்திரை கனி, சித்திரை விஷூ, விஷூ கனி, கனி காணுதல் என பல பெயர்களில் குறிப்பிடுவது உண்டு. விஷூ என்றால் விடியற்காலையில் முதலில் காண்பது என்று பொருள்.

கனி காணுதல் என்றால் என்ன?
சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய நாள் இரவு, ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை பாக்கு, இனிப்பு, தங்கம் நகைகள், தங்க காசுகள், பணம், குங்குமம், மஞ்சள், அட்சதை, பூ ஆகியவற்றை வைத்து, அதற்கு முன் ஒரு கண்ணாடியை வைத்து, பூஜை அறையில் சாமி படத்திற்கு முன்பாக வைத்து விட்டு தூங்க சென்று விடுவார்கள். தமிழ் புத்தாண்டு அன்று காலை எழுந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் நேரடியாக பூஜை அறைக்கு சென்று, தட்டில் வைக்கப்பட்டுள்ள மங்கள பொருட்களை பார்த்து விட்டு, அவற்றை தொட்டு கண்களில் வைத்து வணங்கி விட்டு, கண்ணாடியில் நம்முடைய முகத்தை பார்க்க வேண்டும். இதற்கு பெயர் தான் கனி காணுதல். இப்படி ஆண்டின் முதல் நாளில் மங்கள பொருட்களை முதலில் கண்ட பிறகு அந்த ஆண்டை துவங்கினால், அந்த ஆண்டு முழுவதும் மங்களகரமாகவும், செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை. கனி காணுதல் உருவான கதை :
விஷூ கனி சடங்கு உருவானது ராமாயணத்துடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. புராணங்களின்படி, ராவணன் உலகில் தானே பெரியவன் என்ற அகந்தை ஏற்பட்டது. தன்னுடைய அனுமதி இல்லாமல் எதுவும் நடக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. இதனால் சூரியன் உதிப்பது கூட அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சூரியனின் கதிர்கள் அவனது அனுமதி இல்லாமல் அவரது அரண்மனைக்கு நேரடியாக விழுவது. சூரியனின் கடும் வெப்பம் ஆகியவை ராவணனுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆணவத்தில் உச்சத்தில் இருந்த ராவணன், சூரியனுடன் போர் புரிய முடிவு செய்தான்.இதனால் பயந்து போன சூரியன், அன்றிலிருந்து ராவணனின் இருக்கும் திசையில் தன்னுடைய கதிர்களை வீசுவதை நிறுத்தினான், சூரியன். இதனால் பயிர்கள் சேதமடைந்தன. நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. மக்கள் இருளில் வாழ்ந்தனர். ஸ்ரீராமர் அவர்களை காப்பாற்ற வரும் வரை, ராமாயண போரில் ராவணன் வீழும் வரை அந்த மக்கள் இருளிலிலேயே இருந்தனர். போரில் ராவணன் இறந்த பிறகே அங்கு மீண்டும் சூரிய ஒளி வீச துவங்கியது.இந்த நாளை நினைவுகூறும் விதமாக விஷூ கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.

வைசாகி வரலாறு வைசாகி (Vaisakhi/Baisakhi) என்பது சீக்கியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழாவாகும். இது ஆண்டுதோறும் ஏப்ரல் 13 அல்லது 14 அன்று கொண்டாடப்படுகிறது. 1699-ல் பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங், 'கல்சா பந்த்' (Khalsa Panth) எனும் சீக்கியப் போர்வீரர் சமூகத்தை உருவாக்கிய தினத்தை இது குறிக்கிறது. இது பஞ்சாபில் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. பஞ்சாபியர்களின் சூரியப் புத்தாண்டுத் துவக்கத்தையும், இளவேனில் அறுவடை நாளின் ஆரம்பத்தையும் குறிக்கும் வைசாகி தினம் (Baisakhi) இன்று பஞ்சாப் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கிட்டத்தட்ட நமக்கு பொங்கல் போன்றது தான் பஞ்சாபியரின் வைசாகி என்றாலும் இதுதான் அவர்களுக்கு புத்தாண்டு தினமும் கூட. இந்த நாளில் பஞ்சாப் மாநிலத்தின் உழவர்கள் புனித நதிகளில் நீராடி, தாங்கள் அறுவடை செய்த பொன் நிற கோதுமையை இறைவனுக்கு சமர்ப்பித்து, இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறி, உற்றார் உறவினருடன் ஒன்றுகூடி மகிழ்ந்திருப்பார்கள்.

பஞ்சாபியர் மட்டுமின்றி இதே தினத்தை கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம், ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா, உத்தர்காண்ட் மக்களும், இலங்கை மற்றும் நேபாள நாட்டு மக்களும் கூட தமது புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள் என்றாலும், சீக்கியர்களின் வைசாகிக்கு மட்டும் தியாகத்துடன் கூடிய இன்னுமொரு சிறப்பும் உள்ளது.

சீக்கியம் என்ற சொல்லுக்கு "சீடர் அல்லது கற்றுக் கொள்பவர்" என்றுதான் பொருள். வீரம் என்றால் முதலில் நிற்கும் சீக்கியர்களுக்கு, தியாகத்தின் திறத்தை உணர வைக்க சீக்கியர்களின் பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் உருவாக்கிய 'கல்சா பந்த்' என்ற நிகழ்வின் நினைவு தினமும் தான் இந்த வைசாகி என்று கூறும் சீக்கியர்கள், அதன் வரலாற்றுப் பின்னணியையும் எடுத்துரைக்கிறார்கள்.அவர்களது ஒன்பதாவது குருவான, குரு தேஜ் பகதூர், தனது மக்களுக்காக நடத்திய போராட்டத்தில், முகலாய அரசர் ஔரங்கசீப்பினால் பொதுவெளியில் தலைகொய்யப்பட்டு இறக்க, அவரைத் தொடர்ந்து பொறுப்பேற்ற குரு கோவிந்த் சிங், 1699-ம் ஆண்டு, தனது தந்தையின் வீரத்தையும், தியாகத்தையும் தனது மக்களுக்கு உணர்த்த ஒரு ஏற்பாடு செய்கிறார். அனந்தபூரில், ஒரு பெரிய கூடாரத்தில் மக்களை ஒன்றுதிரட்டி, கூட்டத்தில் யாரேனும் ஐந்து பேரை " இந்த மண்ணின் மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயாரா..?" என்று கேட்க, முதலில் வந்தது "தயா ராம்" என்ற முப்பது வயது இளைஞர்.அவரை அங்கிருந்த தனியான கூடாரத்திற்கு அழைத்துச்சென்ற குரு கோவிந்த் சிங், சற்று நேரத்தில் இரத்தம் சிந்திய வாளுடன் வெளியே வந்து, அடுத்த நபர் யாரெனக் கேட்க, அடுத்து தயக்கமின்றி தங்களை அர்ப்பணித்துக் கொள்ள முன்வந்த மேலும் நான்கு பேர்களைக் கொன்றவர், பிறகு இறுதியாக வெளிவந்த போது, அந்த ஐந்துபேரையும் உயிருடன் அழைத்து வந்தாராம். ஆரவாரமிட்ட மக்கள், தியாகம் செய்த அவர்களை "பஞ்ச் பியாரா", அதாவது "பிரியமுள்ள ஐவர்" என அழைத்து, அந்த ஐவரையும் வணங்கித் தொழுதனர். அப்போது குரு அவர்களை வெட்டிய அந்த அதிசய வாளை, புனித நதிநீர் நிரம்பிய ஒரு கலசத்தில் வைத்து, "அம்ரித்" என்ற சாகாவரம் தரும் அந்த அமிர்த கலச நீரை, முதலில் அந்த ஐவருக்கும் அளித்து, பின்பு மற்ற அனைவருக்கும் பகிர்ந்தளித்தாராம். கூடவே வெட்டப்படாத கேசம், மர சீப்பு, இரும்பு வளையம், வாள், உள்ளாடை என ஐந்து சிறப்பம்சங்களையும் சீக்கியர்களிடம் கொண்டு சேர்க்கிறது கல்சா பந்த்.

இப்படி எதிர்மறை எண்ணங்களைக் களைந்து, வீரத்தை யாசித்து, இறைவனது துதிபாடி, மகிழ்ந்திருந்த தினம் தான், "கல்சா பந்த்" எனும் வைசாகி தினம் என்கிறது சீக்கிய வரலாறு. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வைசாகி நாளன்று குருத்வாராக்களில் சங்கீர்த்தன் இசைத்து, புனித புத்தகத்தைப் படித்து, "கந்த சாகிப்" என்ற வாளால் வீரமும், ஞானமும் பெற்று, அம்ரித் அருந்தி, சுவையான கடா பிரசாதத்தை உட்கொண்டு வழிபடும் நாளாக இருந்து வருகிறது இந்த வைசாகி.

சீக்கியத்தின் நிறுவனர் குரு நானக்கின் பெயரால் நானக்சாகி என அழைக்கப்படும் இவர்களது நாட்காட்டி, குரு நானக் பிறந்த ஆண்டான கிபி 1469-ல் இருந்து ஆரம்பிக்கிறது என்றாலும், 365 நாட்கள் 5 மணி 48 நிமிடம் 45 நொடிகள் நிறைந்த வருடத்தில், 31 நாட்கள் 30 நாட்கள் கொண்ட மாதங்கள், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் அதிகம் என மற்ற எல்லாமே கிரிகோரியன் காலண்டர் போலவே தான், இந்த நானக்பிரார்த்திப்போம்.இப்போதும் ஏப்ரல் பதிமூன்று, வைசாகி நாளன்று, புனித நீராடல், புத்தாடை, பாரம்பரிய பாங்ரா, கிட்டா, பாடல்கள், அறுவடை, இனிப்புகள், மகிழ்ச்சி, ஞான உபதேசம், ஆசீர்வாதம், விருந்து, செழிப்பு என பஞ்சாப் மாநில மக்கள் அனைவருக்கும் வண்ணமிகு நாளாக விளங்குகிறது வைசாகி.

அனைத்திற்கும் மேலாக, வாள் பயிற்சி, குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாளாகவும் இந்நாள் விளங்குகிறது. வீரம் மட்டுமல்ல, நாங்கள் ஈரமும் மிக்கவர்கள் என்று கூறும் சீக்கியர்களின், "கல்சா எய்ட்" எனும் அமைப்பு, கோவிட் உட்பட உலகின் பேரிடர் காலங்கள் அனைத்திலும் பெருமளவு உதவி புரிந்து, அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையும் பெற்றுள்ளது.

ஆக, இந்த பொன் அறுவடை நாளன்று சார்ந்தோர் அனைவருக்கும் மகிழ்ச்சியும், அமைதியும், வீரமும், வெற்றியும் நிறைந்திருக்கட்டும் என்று அவர்களுடன் சேர்ந்து நாமும் பிரார்த்திப்போம்.

:- லட்சுமி சுப்பிரமணியம்


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *