பாப்பகோமோவுக்கு நிவாரணம் இல்லை: லிம் குவான் எங், மகனுக்கு RM280,000 இழப்பீடு செலுத்த வேண்டும்
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
கோலாலம்பூர், செப். 17-
அவதூறு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மற்றும் அவரது மகன் கிளிண்ட் லிம் வே சாவுக்கு மொத்தம் RM280,000 இழப்பீடு செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நிறுத்திவைக்க கோரிய சமூக ஊடகப் பிரபலம் பாப்பகோமோவின் மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
பாப்பகோமோ என அறியப்படும் வான் முகமது அஸ்ரி வான் டெரிஸ் தாக்கல் செய்த அமலாக்கத் தடை மனுவை நீதிபதி ரோஸ்லான் மாட் நோர் நிராகரித்தார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைக்க நீதிமன்றம் தனது விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு தேவையான விசேஷ சூழ்நிலைகளை மனுதாரர் நிரூபிக்கவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் வான் அஸ்ரி RM5,000 வழக்குச் செலவும் செலுத்த உத்தரவிடப்பட்டார்.
கடந்த மே 19-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், 2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பேஸ்புக் பதிவு தொடர்பான அவதூறு வழக்கில் வான் அஸ்ரி பொறுப்பாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, லிம் குவான் எங்கிற்கு RM200,000 மற்றும் அவரது மகனுக்கு RM80,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



