7.5 லட்சம் மதிப்பிலான மின்சிகரெட் பறிமுதல் – எல்லை கடத்தல் முயற்சி தடை
- Surendran Sumdraraj
- 23 Mar, 2026
கோத்தா பாரு, மார்ச் 23-
அண்டை நாட்டிற்குக் கடத்த முயற்சிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 7.5 லட்சம் மதிப்பிலான மின்சிகரெட்டுகளைப் பொது நடவடிக்கை படை (PGA) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பிரிகேட் தெங்காரா PGA கமாண்டர் சீனியர் அசிஸ்டன்ட் கமிஷனர் அஹ்மட் ராட்சி ஹுசைன் தெரிவித்ததாவது, “ஓப்ஸ் தாரிங் வவசான் கிளந்தான் (OTWK)” என்ற இணைந்த நடவடிக்கையின் மூலம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8ஆம் படையணி PGA, கோத்தா பாரு சுங்கத்துறை (JKDM) மற்றும் தும்பாட் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு (BSJD) இணைந்து செயல்பட்டன.
புதன்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் தாமான் பஹாகியா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒரு கிடங்கை திறக்க முயன்ற ஒருவரை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதிகாரிகள் வருவதை உணர்ந்த உடன் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்த கிடங்கில் இருந்து 1,800 மின்சிகரெட் சாதனங்கள் மற்றும் ஒவ்வொன்றும் 30 மில்லிலிட்டர் திறன் கொண்ட 3,800 திரவ கார்ட்ரிட்ஜ்கள் (மொத்தம் 114 லிட்டர்) கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



