மலாக்கா மாநிலத் தேர்தல்: பிஎன் இல்லாமல் தனித்து போட்டியிடவும் பிஎச் தயார் – அமிருதீன் ஷாரி
- Surendran Sumdraraj
- 08 Sep, 2026
சிப்பாங், செப். 8 –
மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளும் போது பாரிசான் நேஷனலுடன் கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாக அதன் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமிருதீன் ஷாரி தெரிவித்துள்ளார்.
மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனலுடன் இணைந்து போட்டியிடுவது அல்லது தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பாரிசான் நேஷனலின் ஒத்துழைப்பு இல்லாமல் பக்காத்தான் ஹராப்பான் தேர்தலில் களமிறங்குமா என்று கேட்கப்பட்டபோது, அத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள கட்சி தயாராக இருப்பதாக அமிருதீன் தெரிவித்தார்.
மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோவுடன் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் இணைய வழியில் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும், அவை இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக் கட்டத்துக்குச் செல்லவில்லை என்றும் அவர் விளக்கினார்.
தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இரு தரப்பும் பின்னர் விரிவாக ஆலோசிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



