ஹீலியம் கேஸ் சிலிண்டரில் மறைத்து வைத்த போதைப்பொருள்: 4 பேர் கைது, பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்

top-news

கோலாலம்பூர், பிப். 9-

ஜாலான் துன் ரசாக் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட இரண்டு சிறப்பு நடவடிக்கைகளில், மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்ததுடன், ஹீலியம் கேஸ் சிலிண்டர்களில் மறைத்து வைக்கப்பட்ட பல்வேறு போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோ பாடில் மார்சுஸ் கூறுகையில், முதல் சோதனை நடவடிக்கை மாலை 5.30 மணியளவில், உளவுத் தகவலின் அடிப்படையில், ‘கோலாலம்பூர் போலீஸ் ஸ்ட்ரைக் போர்ஸ்’ குழுவால் ஜாலான் துன் ரசாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

அந்த நடவடிக்கையில் சீனா மற்றும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், சீனா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் என 26 முதல் 36 வயதுக்குள் உள்ள மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தலைநகரில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சோதனையில் ‘ஹீலியம்’ என எழுதப்பட்ட ஐந்து கேஸ் சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுக்குள் Methylenedioxymethamphetamine (MDMA) வகை போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக தொடர்வதுடன், கைது செய்யப்பட்டவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *