செக்கு சந்திரா வழக்கு: 12 பேர் கைது
- Surendran Sumdraraj
- 16 Mar, 2026
ஷா ஆலாம், மார்ச் 16-
பூச்சோங் தாமான் கின்ராரா குடியிருப்புப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற சொத்துச் சேதம் மற்றும் குற்றவியல் மிரட்டல் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 12 பேரை, ஒரு பெண் உட்பட, சிலாங்கூர் காவல்துறை கைது செய்துள்ளது.
30 முதல் 40 வயதுக்குள் உள்ள சந்தேகநபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை (JSJ), சிலாங்கூர் மாநில காவல் தலைமையக குற்றப்புலனாய்வு துறை மற்றும் செர்டாங் மாவட்ட காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் பந்திங், சுபாங் மற்றும் செர்டாங் உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்ததாவது, கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பேர் விசாரணைக்கு உட்பட்ட சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை இந்தச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாகக் காவல்துறை வகைப்படுத்தியுள்ளது.
தற்போது ஏழு சந்தேகநபர்கள் காவல் துறையின் விசாரணைக்காகத் தொடர்ந்து தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேர் காவல் துறை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சிலாங்கூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



