ஜொகூரில் இணைய மோசடி கும்பல்கள் முறியடிப்பு: 335 பேர் கைது
- Surendran Sumdraraj
- 28 Jul, 2026
ஜொகூர் பாரு, ஜூலை 28-
ஜொகூரின் இஸ்கண்டர் புத்ரியில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியில் செயல்பட்டு வந்த இரண்டு இணைய மோசடி ('காலிங் சென்டர்') கும்பல்களைப் போலீசார் முறியடித்து, 335 பேரை கைது செய்துள்ளதாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாட் கூறினார்.
கடந்த ஜூலை 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 309 சீனர்கள், 19 இந்தோனேசியர்கள், நான்கு மியான்மர் நாட்டவர்கள் மற்றும் மூன்று மலேசியர்கள் அடங்குவதாகவும், இவர்களின் வயது 20 முதல் 58 வயதுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
போலீசார் ஒரே நேரத்தில் 27 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐந்து பங்களாக்களில் சோதனை நடத்தினர். இந்த இடங்கள் மோசடி கும்பல்களின் செயல்பாட்டு மையங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் இரண்டு வெவ்வேறு இணைய மோசடி கும்பல்கள் முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இந்த கும்பல்கள் கிரிப்டோகரன்சி முதலீட்டு திட்டங்கள், போலி முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் 'லவ் ஸ்காம்' எனப்படும் காதல் மோசடிகள் மூலம் வெளிநாட்டு நபர்களை, குறிப்பாக சீனா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களை குறிவைத்து ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த மோசடி வலையமைப்பின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், இணைய வழி முதலீட்டு சலுகைகள் மற்றும் அறிமுகமில்லாத நபர்களின் தொடர்புகளில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



