எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசாங்கத்தை விமர்சிக்கும் சுதந்திரத்தை இழந்துவிட்டனர்! – வான் அஹ்மாட் ஃபைசால் சாடல்
- Shan Siva
- 30 Oct, 2026
கோலாலம்பூர், அக் 30: அரசாங்கத்துடன் நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தத்தில் (CSA) கையெழுத்திட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தை விமர்சிக்கும் சுதந்திரத்தை இழந்துவிட்டதாக மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் கமால் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் ஒருதலைப்பட்சமானவை என்றும், மத்திய அரசாங்கம் தொடர்பான முக்கியமான விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்புவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு இதேபோன்ற ஒப்பந்தத்தை முன்மொழிந்தபோது,
அப்போதைய பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் அதனை நிராகரித்ததை வான் அஹ்மாட் ஃபைசால் சுட்டிக்காட்டினார்.
அப்போது, இத்தகைய ஒருதலைப்பட்சமான நிபந்தனைகள் எதிர்க்கட்சியின் சுதந்திரத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதுடன், அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச் செய்யும் நடவடிக்கைகளையும் பாதிக்கும் என முகைதீன் கருதியதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்றத்தில் அரசாங்கம் ஏற்கெனவே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால், இந்த ஒப்பந்தத்தின் அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த ஒப்பந்தம் எதிர்க்கட்சியைக் கட்டுப்படுத்தவும்,
அதன் குரலை ஒடுக்கவும் பயன்படுத்தப்படும்
ஓர் ஆயுதம் என்றும் அவர் சாடினார்.
இதற்கிடையில்,
நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆறு பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் முகைதீன் யாசின், ராட்ஸி ஜிடின், அலி பிஜு, சுஹைமி அப்துல்லா, நஸ்ரி அபு ஹசான் மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் அடங்குவர்.
முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானும்,
2024ஆம் ஆண்டு பெர்சாத்துவிலிருந்து நீக்கப்பட்ட ஆறு முன்னாள் உறுப்பினர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

