போட்டிக் குழுவால் எம்டியூசி தலைவர் நீக்கம்!

- Muthu Kumar
- 05 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 5-
மலேசிய வர்த்தகத் தொழிற்சங்கத்தில் (எம்டியூசி கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் தலைமைத்துவப் போராட்டம், மற்றொரு திருப்புமுனையை சந்தித்திருக்கிறது.இம்முறை, அச்சங்கத்தின் போட்டிக் குழுவினால் அதன் தலைவர் எஃபெண்டி அப்துல் கனி நீக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பிரச்சினைக்குரியதாக இருந்து வரும், அக்குழுவை வழிநடத்தி வரும் சங்கத்தின் தலைமைச் செயலாளர் கமாருல் பஹரின் மன்சோர் தலைமையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் எஃபெண்டியை நீக்குவதென்று முடிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.சட்டவிரோதமானது என்று எஃபெண்டி கூறும், கடந்த ஜனவரி 19ஆம் தேதி நடந்த அப்பொதுக் கூட்டம், சங்கத்தின் உதவித் தலைவரான டாவுட்கப்லி நோர் கசாலியை சங்கத்தின் இடைக்கால தலைவராக நியமித்திருந்தது.
அதன் பின்னர், இடைக்காலத் தலைவர் எனும் முறையில் தாம் எடுத்த முதல் நடவடிக்கையாக, தலைவர் பதவியிலிருந்து எஃபெண்டி நீக்கப்பட்டுள்ளார் என்று நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் டாவுட்கப்லி குறிப்பிட்ட்டார்.
ஆதலால், எந்த ஒரு கூட்டத்திலும் எம்டியூசியைப் பிரதிநிதித்து எஃபெண்டி கலந்து கொள்ள முடியாது என்றும் இனி அவர் வெளியிடும் எந்த ஓர் அறிக்கையும் எம்டியூசியை பிரதிநிதிக்காது என்றும் டாவுட்கப்லி தெரிவித்தார்.
எஃபெண்டி ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்த எந்த ஒரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
எம்டியூசியை அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தி, மூன்றாம் தரப்பினரால் கடந்த ஆண்டு பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான அக்குழுவின் நடவடிக்கை ஒரு நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்று, எஃபெண்டி நேற்று குற்றஞ்சாட்டினார்.கொள்கை சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதிலிருந்தும் எம்டியூசியை தடுக்கும் நீதிமன்ற உத்தரவும் நடப்பில் இருப்பதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *