சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினம் – பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்
- Surendran Sumdraraj
- 11 Sep, 2026
புதுடெல்லி, செப். 11 –
சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்திய தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவரை இன்று நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தியாவின் வேதாந்த தத்துவங்களையும் யோகாவையும் மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதில் சுவாமி விவேகானந்தர் முக்கிய பங்காற்றியவர். 1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்த அவர், இந்திய ஆன்மிக சிந்தனைகளை உலக அரங்கில் எடுத்துச் சென்ற தலைசிறந்த சிந்தனையாளராகப் போற்றப்படுகிறார்.
1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் நாடாளுமன்ற மாநாட்டில் விவேகானந்தர் உரையாற்றினார்.
“அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே” என்று தொடங்கிய அவரது புகழ்பெற்ற உரை, அங்கு கூடியிருந்த சுமார் 7 ஆயிரம் பிரதிநிதிகளின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. அந்த உரை இந்தியாவின் ஆன்மிக மரபையும் இந்து மதத்தின் சிந்தனைகளையும் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்திய முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, தனது சமூக வலைதளப் பதிவில், 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி சிகாகோவில் விவேகானந்தர் நிகழ்த்திய உரை இந்தியாவின் நாகரிக நெறிமுறைகளை உலகுக்கு எடுத்துக்காட்டியதாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



