ஜொகூர் தேர்தல்: 5 சேவை உறுதிமொழிகளை அறிவித்த பெர்சாமா கட்சி
- Surendran Sumdraraj
- 30 Jun, 2026
ஜொகூர் பாரு, ஜூன் 30 –
ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பெர்சாமா (BERSAMA) கட்சி, வாக்காளர்களுக்காக ஐந்து சேவை உறுதிமொழிகளை (Aku Janji Khidmat) அறிவித்துள்ளது. மாநில அரசை அமைப்பதை விட, வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு அரசின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதே தனது முக்கிய நோக்கம் என்று கட்சி தெரிவித்துள்ளது.
பெர்சாமா தலைவர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி கூறுகையில், கட்சி 15 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதால், தேர்தல் அறிக்கையை (Manifesto) வெளியிடாமல், நீண்டகால சேவை உறுதிமொழிகளை அறிவிக்கும் அணுகுமுறையைத் தேர்வு செய்துள்ளதாக விளக்கினார்.
“தேர்தலில் வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும், மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே எங்கள் உறுதி. அதற்காகவே இந்த ஐந்து சேவை உறுதிமொழிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
முதல் உறுதிமொழியாக, ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் முகாம்களை (Daftar Bergerak Aduan Rakyat) நடத்தி, பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் தங்களது உள்ளூர் மற்றும் தேசிய பிரச்சினைகளை நேரடியாக கட்சித் தலைமையிடம் தெரிவிக்கக்கூடிய டிஜிட்டல் தளமும் உருவாக்கப்படும் என்று ரபிசி தெரிவித்தார்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களுடன் தொடர்ச்சியான தொடர்பை பேணுவதையும், அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக பயனுள்ள கண்காணிப்பு மற்றும் சமநிலை (Check and Balance) பொறுப்பை மேற்கொள்வதையும் பெர்சாமா கட்சி தனது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



